மகாவலி தாழ்நிலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம்! மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
புதிய இணைப்பு
நாவலப்பிட்டியின் அருகே பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளது.
அதன் காரணமாக அதனை அண்டிய பிரதேசத்தில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக, அப்பகுதிகளில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாவலப்பிட்டியின் கித்துல்கோட்டே, லபுவெல்கொட்டுவ மற்றும் ஜயசுந்தரஓவிட்ட ஆகிய பகுதிகளில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகளும் வீடுகளும் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாகப் பதிவாகியுள்ளது
மூன்றாம் இணைப்பு
மகாவலி கங்கையை சூழவுள்ள மேலும் பல பிரதேசங்களுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ளது.
இதற்கமைய, கங்க இஹள கோரளை, உடபலாத்த, தொலுவ, உடநுவர, யடிநுவர, கங்கவட்ட கோரளை, ஹாரிஸ்பத்துவ மற்றும் பாததும்பர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அங்குள்ள வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் 'சிவப்பு' எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எனவே மகாவலி ஆற்று பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
இதன்படி, மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நிலப்பகுதிகளுக்கு சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, அப்பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் அங்குள்ள வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மகாவலி கங்கைக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.