மினசோட்டா மோசடி வழக்கு: அமெரிக்காவின் முக்கிய குற்றவாளி சோமாலியாவில் கைது!
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் நடைபெற்ற மிகப்பெரிய நிதி மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான அப்திகெர்ம் அப்தெலாஹி ஈட்லே (42), சோமாலியாவின் தலைநகரான மொகடிஷுவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழை குழந்தைகளுக்கு உணவு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட சுமார் 250 மில்லியன் டொலர் கூட்டாட்சி நிதியை மோசடி செய்த 'பீடிங் அவர் பியூச்சர்' என்ற திட்டத்தின் முக்கிய பின்னணியாக இவர் செயல்பட்டுள்ளார்.
மினசோட்டா மோசடி
இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளியான ஐமி பாக் என்பவருக்கு ஏற்கனவே 40 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அடுத்தபடியாக இந்த மோசடியை வழிநடத்திய ஈட்லே, அமெரிக்காவிலிருந்து தப்பி ஓடி சோமாலியாவில் பதுங்கியிருந்தார்.

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI) மற்றும் சோமாலியாவின் தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு முகமை (NISA) ஆகியவை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் மூலம் கடந்த வியாழக்கிழமை இவர் கைது செய்யப்பட்டார்.
போலியான உணவு விநியோக மையங்களை உருவாக்கி, ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உணவு வழங்கியதாக அரசுக்கு போலிப் பட்டியல்களை அனுப்பி ஈட்லே இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார்.
சோமாலியாவில் கைது
இந்த சர்வதேச கைது நடவடிக்கை, அமெரிக்க நிதி மோசடியில் ஈடுபட்டு வெளிநாடுகளில் தஞ்சம் புகுபவர்களைப் பிடிப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

அதே நேரத்தில், இந்த மோசடி வழக்கை முன்வைத்து அமெரிக்காவில் வாழும் சோமாலிய சமூகத்தினர் மீது கடுமையான குடியேற்றக் கட்டுப்பாடுகள் மற்றும் கெடுபிடிகள் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.