வரிச் சலுகைகள் வழங்குவது குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
மக்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கி உணவுப் பொருள்களின் விலைகளைக் குறைக்க வேண்டும் என்ற ஐந்து வருட கொள்கைப் பிரகடனத்தை நாம் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவோம் என பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், "பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அந்தச் சிரமங்களை எதிர்கொள்ளவும் தயாராகவுள்ளோம்.
பொருட்களின் விலை
ஆனால், இவ்வாறு ஏற்றுக்கொள்வதை அரசின் பலவீனம் என்று கருதக்கூடாது. நாட்டை நாம் கட்டம் கட்டமாகக் கட்டியெழுப்பத் தயாராக இருக்கின்றோம். எதிர்க்கட்சியின் இன்றைய நிலைமையோ, அவர்கள் ஸ்திரமான நிலையிலும் இல்லை, மாற்றத்தைக் காணவும் தயாரில்லை.

வரவு - செலவுத் திட்டத்தை ஆழமாக ஆராய்ந்து எதிர்க்கட்சி தனது ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பழைய முறைகளைப் பின்பற்றி நாட்டை முன்னேற்ற முடியாது.
எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் அவை குறைவாகவே உள்ளன. அபிவிருத்தியடைந்து வருவதாகக் கூறப்படும் பல நாடுகளை விடவும் குறைந்த விலைகளிலேயே இங்கு எரிபொருள் வழங்கப்படுகின்றது. எரிபொருளுக்காக 100 பில்லியன் ரூபாவை ஒதுக்கி அரசு மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது.
மக்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கி உணவுப் பொருள்களின் விலைகளைக் குறைக்க வேண்டும் என்பது எமது கொள்கைப் பிரகடனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த ஐந்தாண்டுத் திட்டத்தை நாம் திட்டமிட்ட முறையில் கட்டம் கட்டமாகச் செய்வோம். சகல துறையினருக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டிலிருந்தே அரசு செயற்படுகின்றது" என்றார்.