அமைச்சர் ரமேஷ் பத்திரன புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்
பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட அணியினர் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் காணப்படும் பாரதூரமான அரசியல் மோதல்களை அடிப்படை காரணமாக கொண்டு, இவ்வாறு புதிய அரசியல் கட்சியை ஆரம்பிப்பது குறித்து இவர்கள் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ரமேஷ் பத்திரன ஆரம்பிக்கும் கட்சியில் இணைய விரும்பும் சிலர்
மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உட்பட சிலர் அந்த கட்சியில் இணைய ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளதாக பேசப்படுகிறது.
மருத்துவரான அமைச்சர் ரமேஷ் பத்திரன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான காலஞ்சென்ற ரிச்சட் பத்திரனவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுஜன பெரமுனவில் இருந்து ஏற்கனவே சில அணிகள் விலகி விட்டன
அதேவேளை ஏற்கனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து முக்கிய அரசியல்வாதிகள் பலர் வெளியேறி தனித்து இயங்கி வருகின்றனர்.
இவர்களில் முக்கியமான அணியாக டளஸ் அழகப்பெரும தலைமையிலான இலங்கை மக்கள் காங்கிரஸ் செயற்பட்டு வருகிறது.
மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றனர். அத்துடன் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உட்பட சிலர் வேறு கூட்டணியை உருவாக்கி செயற்பட்டு வருகின்றனர்.
பொதுஜன பெரமுனவின் கூட்டணியில் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் அதில் இருந்து விலகியுள்ளது.