செந்தில் தொண்டமானின் நடவடிக்கை நியாயமற்றது: அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க
பொரலுகந்த ரஜமஹா விகாரையின் மகாநாயக்கர், அம்பிட்டியே சுகித வன்சதிஸ்ஸ தேரரை விகாரைக்குள் பிரவேசிக்க விடாமல் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் எடுத்த நடவடிக்கை நியாயமற்றது என புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேரரை விகாரைக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் கிழக்கு மாகாண ஆளுநரின் தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதா என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியேரத்தின தேரர் சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
நீதிமன்ற வழக்குகள் விசாரணை
எவ்வாறாயினும், குறித்த விவகாரம் தொடர்பாக இரண்டு நீதிமன்ற வழக்குகள் விசாரணையில் உள்ளதால், அது தொடர்பான விபரங்களை வெளியிடும் நிலையில் தாம் இல்லை என்று அமைச்சர் கூறினார். மேலும், அண்மைக் காலத்தில் பெருமளவிலான தொல்பொருள் இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
சில தளங்கள் புதையல் வேட்டைக்காரர்களால் அழிக்கப்பட்டுள்ளன, மற்றவை ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களால் அழிக்கப்பட்டுள்ளன என்று அவர் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையில் பாதுகாக்கப்பட்ட நாகச்சோலை உட்பட வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சில விகாரைகள் தொடர்பாகவும் குருந்தி விகாரை தொடர்பாகவும் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன என்று அதுரலியே ரத்தன சுட்டிககாட்டினார்.
தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பது முக்கியம்
போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு காணி பகிர்ந்தளிப்பதை எவரும் எதிர்க்கவில்லை, ஆனால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், பிரச்சினைகளை சுமுகமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என
அமைச்சர் விதுர விக்ரமநாயக்க உறுதியளித்தார்.




