ஆதாரங்களுடன் சிக்கிய எவராக இருந்தாலும் தண்டனை உறுதி! அமைச்சர் நளிந்த பகிரங்க எச்சரிக்கை
கடந்த காலங்களில் நாட்டைச் சூறையாடியவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டுவதை 'அரசியல் பழிவாங்கல்' எனக் கூறி ரோஹித அபேகுணவர்தன போன்ற ராஜபக்ச அணியினர் தப்பிக்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ பதிலடி கொடுத்துள்ளார்.
அநுர அரசு ராஜபக்சக்களையும், அவர்களின் சகாக்களையும் சிறையில் அடைப்பதிலேயே குறியாக உள்ளது என ரோஹித அபேகுணவர்தன எம்.பி. முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஊடகங்களிடம் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறுகையில், ராஜபக்சக்களையும், அவர்களின் சகாக்களையும் பற்றிச் சிந்திப்பதற்கு எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை. அவர்கள் இப்போது ஓர் அரசியல் சக்தியே கிடையாது.
அரசின் நிலைப்பாடு
ஆனால், தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் மக்கள் சொத்தைத் திருடியவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது அரசின் நிலைப்பாடு.
அதைச் செய்யும் போது திருடர்களுக்குப் பயம் வருவது இயல்பானதுதான். அதைத்தான் இவர்கள் 'பழிவாங்கல்' என்று கூச்சலிடுகின்றார்கள். விவசாயிகள், கடற்தொழிலாளர்கள் மற்றும் அரச ஊழியர்கள் பற்றிப் பேச ரோஹிதவுக்கு எந்த அருகதையும் இல்லை.

இவர்களது ஆட்சிக் காலத்தில்தான் விவசாயிகள் உரமில்லாமலும், மீனவர்கள் எரிபொருள் இல்லாமலும், மக்கள் வரிச்சுமையாலும் வீதிக்கு வந்தார்கள். அந்தப் பாவங்களைச் சரிசெய்யவே நாம் இன்று பாடுபடுகின்றோம்.
முறையான விசாரணை
ராஜபக்ச அணியைப் பாதுகாப்பது எமது பணியல்ல, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதே எமது பணி. குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவது அரசின் கடமையாகும். முறையான விசாரணைகளின்றி யாரையும் சிறையில் அடைக்க மாட்டோம்.
ஆனால், ஆதாரங்களுடன் சிக்கியவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தருவதில் இந்த அரசு பின்வாங்காது என்றும் அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |