உண்மையை வெளிக்கொண்டு வரும் விசாரணை: சந்தேகத்தை ஏற்படுத்தும் ஒரு சிலரின் கலக்கம் - அமைச்சர் பகிரங்கம்
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தேடிவரும் உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தனது புத்தகத்தின் ஊடாக வெளிப்படுத்தினால் அது விசாரணைகளை முன்னெடுக்க மிகவும் இலகுவாக இருக்கும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நடுநிலையாக செயற்படும் இலங்கை
மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமைகளுக்கு மத்தியில், இலங்கை ஒரு நாடு என்ற அடிப்படையில் நடுநிலையாகச் செயற்பட்டு வருகின்றது. தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களைப் பாதுகாப்பாகத் தற்காலிகமாகத் தங்கியிருக்கச் செய்துள்ளோம்.
அரசின் இத்தகைய தீர்மானங்களை உலக நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் வரவேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் மாத்திரம் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். உதய கம்மன்பிலவைக் கைது செய்யப்போவதாக அரச தரப்பில் யாரும் குறிப்பிடவில்லை.

அவர் நேற்று (27 ஆம் திகதி) நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக முன்னிலையாக வேண்டியிருந்தது. அவருக்குப் பிணை கிடைத்தால், எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி அவர் தனது புத்தகத்தை வெளியிட முடியும் என்றே நாம் குறிப்பிட்டோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகள் ஊடாகத் தேடிவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி குறித்து கம்மன்பில தனது புத்தகத்தில் தகவல்களை வெளியிட்டால், விசாரணை அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலங்களைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த முடியும்.
குண்டுத் தாக்குதல் குறித்த உண்மைத் தகவல்கள் வெளிவர வேண்டும் என்பதற்காகவே விசாரணைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உண்மைகள் வெளிவரும் போது எதிர்க்கட்சியின் ஒருசில உறுப்பினர்கள் கலக்கமடைவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது என்றார்.
ஒன்றாக சுற்றுலா சென்றுள்ள எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... எங்கு சென்றுள்ளார்கள் பாருங்க Cineulagam
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam