பாலைதீவு பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்
பூநகரி - பள்ளிக்குடா பிரதேசத்தினை சேர்ந்த பாலைதீவு பகுதியில் நீர்வேளாண்மை உற்பத்திகளுக்கு பொருத்தமான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று (05.02.2023) குறித்த பகுதிக்கான கள விஜயத்தை அதிகாரிகள் சகிதம் கடற்றொழில் அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது பாலைதீவு அந்தோனியார் ஆலயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
ஆலயத்தின் செயற்பாடுகள் மற்றும் மார்ச் 08ஆம் திகதி பாலைதீவு அந்தோனியார் ஆலயத்தில் ஆரம்பமாகவுள்ள கொடியேற்றத் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக நிர்வாகிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
மேலும் ஆலய புனரமைப்பு பணிகளுக்கு நிதியுதவி வழங்கவும் உறுதியளித்துள்ளார்.
கடலட்டை மற்றும் கடற்பாசி வளர்ப்பு
நீர்வேளாண்மை உற்பத்திகளான கடலட்டை மற்றும் கடற்பாசி வளர்ப்பு போன்றவற்றை பாலைதீவை அண்டிய பகுதிகளில் ஆய்வு ரீதியாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில், தனியார் முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புடனும், பாலைதீவை அண்மித்த பிரதேச மக்களின் பங்களிப்புடனும் மேற்கொள்வது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், கடற்றொழிலாளர்களுக்கு மேலதிக வாழ்வாதாரத்தை வழங்கக்கூடிய, குறித்த உற்பத்திகளை மேற்கொள்கின்ற தரப்புகள், கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை பிரதேசத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்.
அத்துடன் பாலைதீவு
அந்தோனியார் ஆலய புனரமைப்பு மற்றும் திருவிழா கால செலவீனங்களுக்கும்
பங்களிப்பு செய்ய வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.




