யாழ். நகரில் புதிய பேருந்து சேவையை ஆரம்பித்து வைத்த அமைச்சர் டக்ளஸ்
வலிகாமம் வடக்கு வயாவிளான் திக்கம்புரை ரெயிலர்கடை சந்தியில் இருந்து யாழ். (Jaffna) நகருக்கான பேருந்து சேவை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் (Douglas Devananda) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து சேவையை இன்று (16.04.2024) காலை 07 மணியளவில் வைபவ ரீதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா அண்மையில் வயாவிளான் பகுதிக்கு சென்றிருந்த சமயம் குறித்த பகுதி மக்கள் தமது போக்குவரத்து பிரச்சினையின் அசௌகரியங்கள் குறித்து எடுத்துக் கூறி தீர்வை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஏற்பாடுகள்
மக்களின் குறித்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சரின் பணிப்புக்கமைய வட பிராந்திய போக்குவரத்து சபை அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இந்த பேருந்து சேவையானது வயாவிளான் சுதந்திரபுரம் ஊடாக வயாவிளான் மத்திய கல்லூரி, ஈழகேசரி பொன்னையா வீதி வழியாக குரும்பசிட்டி, கட்டுவன் சந்தி ஊடாக சென்று தெல்லிப்பளை வைத்தியசாலையை அடைந்து கேகேஎஸ் வீதி வழியாக யாழ். நகரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வறுத்தலைவிளான் சாந்தை சந்தி வரையிலான சேவையை தையிட்டி ஆவளைச் சந்தி வரை நீடிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |