புலம்பெயர் இளையோருக்கு அமைச்சர் டக்ளஸ் உணர்வுபூர்வ அழைப்பு..!
சுவிட்ஸர்லாந்தில் வாழ்ந்து வருகின்ற புலம்பெயர் மக்களின் இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளையோர், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தினால் நேற்று (31.07.2024) ஏற்பாடு செய்யப்பட்ட சுவிட்ஸர்லாந்தின் 733 ஆவது சுதந்திர தின நிகழ்வில் இலங்கை அரசின் சார்பாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பு உறவு
மேலும் உரையாற்றுகையில், "சுவிட்ஸர்லாந்தின் சுதந்திர தின நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பாகவும், எமது அரசாங்கத்தின் சாரபாகவும் இலங்கை மக்கள் சார்பாகவும் கலந்து கொள்ள கிடைத்த பெருமை மிகு தருணத்தில், சுவிட்ஸர்லாந்தின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவு என்பது நீண்ட வரலாற்றைக் கொண்டது.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோது அதனை உடனடியாக அங்கீகரித்த நாடுகளுள் சுவிட்ஸர்லாந்தும் ஒன்று என்பதை இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
பல்வேறு துறைசார் முதலீடுகள்
தற்போது சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த பல நிறுவனங்கள் தமது முதலீடுகளை இலங்கையில் மேற்கொண்டுள்ளன.
குறிப்பாக சுற்றுலாத்துறை, கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், அதேபோன்று வர்த்த ரீதியான முதலீடுகள் என பலவேறு துறைசார் முதலீடுகளாக அவை அமைந்துள்ளன.
இவை இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பதுடன் வேலைவாய்ப்புக்களையும் வழங்குகின்றன.
மேலும், இலங்கை - சுவிட்ஸர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு, ஒத்துழைப்பு போன்ற அனைத்தும் இரண்டு நாடுகளை சேர்ந்த மக்களுக்கும் நன்மைகளை உருவாக்கும் வகையில் முன்கொண்டு செல்லப்பட வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |