சட்டத்தரணியின் செயற்பாடு குறித்து அமைச்சர் அதிருப்தி
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சட்டதரணியின் நடவடிக்கை குறித்து பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு இடையூறு ஏற்படும் வகையில் சட்டத்தரணி ஒருவர் நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.
பக்க சார்பற்ற விசாரணை
அந்த விடயம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.
சட்டத்தரணியின் அநாகரிகமான செயல் நீதிமன்றை அவமதிப்பதாகவே கருதப்பட வேண்டும் எனவும் குறித்த சட்டத்தரணிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டத்தரணியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டு இருந்தால் அதற்காக குரல் கொடுக்க தயங்க போவதில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தாம் இந்த விடயத்தில் தலையீடு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பக்க சார்பற்ற விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் பிரியந்த விரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாளைய தினம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் இந்த நடவடிக்கைக்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தினம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.