அமைச்சர் பந்துல யாழ் விஜயம்(Photos)
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் சென்றுள்ளார்.
கொழும்பு - யாழ்ப்பாணம் தொடருந்து சேவையில், யாழ்ப்பாணம் நிலையத்தை சென்றடைந்த அமைச்சரை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
அமைச்சரின் அறிவிப்பு
இதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அதிபரை சந்தித்த அமைச்சர், காங்கேசன்துறை - கொழும்பு தொடருந்து சேவையை மேம்படுத்துவது, மற்றும் சேவைகளை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை, இரவு தபால் சேவையின் மீள் ஆரம்பம் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் அறிவியல் நகர், சாவகச்சேரி நிலையங்களில் உத்தரதேவி தொடருந்து சேவை தரித்து நிற்கும் என இந்த சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
கோரிக்கை
பல பழுதடைந்த பேருந்துகள் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் திருத்த முடியாமல் உள்ளதாகவும் அவற்றை திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு ஆவண செய்து தருமாறு அமைச்சரிடம் கூறப்பட்டுள்ளது.
மேலும் பத்து வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு இன்னும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என்றும் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கியுதவுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன நாளடைவில் அது தொடர்பில் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்தி-எரிமலை



