236 இலங்கையர்களுக்கு சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கை ! நாடாளுமன்றில் வெளியான தகவல்
இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026ஆம் ஆண்டில் 18ஆக குறைவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், 2020 முதல் 2026 வரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய 134 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
இதில் 2020 இல் 02, 2021 இல் 04, 2022 இல் 23, 2023 இல் 16, 2024 இல் 42, 2025 இல் 29 மற்றும் 2026 இல் இதுவரை 18 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னல்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகள் மூலம் சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கை
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகள் உட்பட 236 இலங்கையர்களுக்கு சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 94 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளாகவும் போதைப்பொருள் கடத்தல்காரர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 17 சிறப்புப் பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதுடன், வெளிநாடுகளில் இருந்து செயற்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை நாட்டிற்கு வரவழைத்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பதற்ற நிலை - பொலிஸ் அதிகாரி தொடர்பில் பெண்ணின் அதிர்ச்சி குற்றச்சாட்டு