லெபனான் மக்கள் குறித்து ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
லெபனானில் சுமார் ஓரு மில்லியன் மக்கள் வரையில் கடுயைமான உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
தொடர் போர்கள் மற்றும் தீவிர பொருளாதார நெருக்கடி காரணமாக லெபனானில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அன்றாட உணவைப் பெற முடியாமல் தவித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் லெபனானின் விவசாய அமைச்சு ஆகியன எச்சரித்துள்ளன.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத் திட்டம் மற்றும் லெபனான் விவசாய அமைச்சு ஆகியவை இணைந்து புதன்கிழமை வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் நான்கில் ஒரு பங்கினர் கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளன.
இந்தப் பட்டினி நிலைமையை உடனடியாகக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகள் தேவை என ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 2027ம் ஆண்டு நடுப்பகுதிக்குள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.15 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் எச்சரித்துள்ளது.
2019-ஆம் ஆண்டு தொடங்கிய முன்னெப்போதும் இல்லாத அளவிலான பொருளாதாரச் சரிவு மக்களிடம் இருந்த சேமிப்புகளைக் கரைத்துள்ளதோடு, கடன் சுமையையும் அதிகரித்துள்ளது.
போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத சூழலில் உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மக்களின் குடும்ப வரவு செலவுத் திட்டத்தைப் பெரிதும் பாதித்துள்ளது.
2023-ஆம் ஆண்டுக்குப் பிறகு இஸ்ரேலுடன் நேரிட்ட இரு தொடர் போர்கள் நாட்டின் கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தை முற்றிலும் நிலைகுலையச் செய்துள்ளன.
நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்கச் சர்வதேச சமூகம் உடனடியாக லெபனானிற்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.