மந்த போசாக்கினை நிவர்த்திசெய்ய மாணவர்களுக்கு திரவ பால் வழங்கும் திட்டம் ஆரம்பம்(Photos)
முல்லைதீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலையத்திற்குற்பட்ட மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பாடசாலையில் நேற்று(03.11.2022)மாணவர்களுக்கான திரவ பால் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் மாணவர்களிடையே போசாக்கு விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் குறித்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாந்தை கிழக்கின் அரச கால்நடை வைத்திய அதிகாரி அனோஜா பத்மநாதன் குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கான திரவ பால் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
மந்த போசனை குறைப்பாடு
நிகழ்வின் பின் கருத்து தெரிவித்த வைத்திய அதிகாரி,“தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மந்த போசாக்கு நிலவி வருகின்றது.
குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் சிறார்கள் , மாணவர்கள் மற்றும் வயதானவர்களிடையே இந்த மந்த போசனை குறைப்பாடு அவதானிக்கப்பட்டிருகின்றது.
இதை நிவர்த்தி செய்யும் முகமாக நிரல் அமைச்சின் திட்டத்தின் கீழ் திரவபால் வழங்கும் திட்டமானது முதற்கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு இடம்பெறும்.
இந்த திட்டத்தின் ஊடாக மாணவர்களிடையே நிலவும் மந்த போசாக்கினை நிவர்த்திசெய்ய ஓரளவு முடியும்.”என தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் மாந்தை கிழக்கு கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன்
மாந்தை கிழக்கு கால்நடை வளர்ப்போர் சங்கமும் இணைந்துள்ளமை
குறிப்பிடத்தக்க விடயமாகும்.