பால்மா விலை குறைப்பு! வெளியானது புதிய விலை விபரங்கள்
பால்மா விலையை குறைப்பதற்கு மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”பாலுற்பத்தி அதிகரித்துள்ளமையினால் வருமானம் அதிகரித்துள்ளது. இந்த வருமானம் அதிகரித்ததன் பிரதிபலனை நுகர்வோருக்கு வழங்கும் பொருட்டு இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளனர்.
விலை விபரங்கள்
அதன்படி, நேற்று முதல்(10.09.2024) நடைமுறைக்கு வரும் வகையில் , 400 கிராம் பால்மா பொதி 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 190 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒரு சில மாதங்களில் பால்மா விலையை மேலும் குறைக்க முடியும்.
பால் உற்பத்தியின் போது அறவிடப்படும் வரிக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் நிதியமைச்சினால் தனிப்பட்ட தீர்மானம் மேற்கொள்ள முடியாது. சர்வதேச நாணயநிதியத்துடன் இணங்கியே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.அவ்வாறு உடன்படும் பட்சத்தில் மேலும் 200 ரூபாவினால் பால்மா விலையினை குறைக்க முடியும்.
பால் உற்பத்தி
எனவே எதிர்காலத்தில் பால்மா இறக்குமதியை மட்டுப்படுத்தி உள்நாட்டில் பால்மா உற்பத்தியினை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்னர், கால்நடைகளுக்கான உணவு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.அதனால் பால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது.
எனினும் கடந்த காலங்களில் நாம் மேற்கொண்ட தீர்மானங்களின் பிரதிபலனாக தற்போது பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.”என தெரிவித்துள்ளார்.