கால்நடைகளுக்கு தீவனமாக மாறும் 4 இலட்சம் கிலோகிராம் பால் மா: பின்னணியில் வெளியான காரணம்
நாட்டில் பால் மா தட்டுப்பாட்டை ஏற்படுத்த பல அரச நிறுவனங்களின் அதிகாரிகள் சதி செய்து வருவதாக பால் மா இறக்குமதியாளர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜூலை மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 4 இலட்சம் கிலோகிராம் பால் மாவை கால்நடை தீவனமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் கலாநிதி லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
பழுதடைந்த பால்மா
“துறைமுகத்தில் 4 லட்சம் கிலோ பால் மா சிக்கியுள்ளது. அது 16 இலட்சம் குழந்தைகளுக்கான பால் மாவாகும். ஜூலையில் இருந்து துறைமுகத்தில் சிக்கி, இப்போது பழுதடைந்து போயுள்ளது.
இப்போது கோழி தீவனத்திற்காக குறித்த பால் மாவினை ஏலம் விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனை அதிக வெப்பம் இல்லாத இடத்தில் சேமிக்க வேண்டும். அவர்களுக்கு அத்தகைய வசதிகள் இல்லை என்று சுங்கத்துறை தெரிவிக்கின்றது.
"இதேவேளை, சர்ச்சைக்குரிய பால் மாவை சுங்கத்தில் இருந்து விடுவிப்பதற்கான அனுமதியை வழங்க தமக்கு அதிகாரம் இல்லை என இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உபுல்மலி பிரேமதிலக்க தெரிவித்துள்ளார்.
பால் மா இறக்குமதி
பால் மா இறக்குமதி செய்வதற்காக கைத்தொழில் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட உரிமத்தின் கீழ் பால் மா உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் அந்த தொகையை விடுவித்துக் கொள்ள இறக்குமதியாளர் அனுமதி கோரிய போதிலும், சட்டத்திற்கு புறம்பாக இறக்குமதி செய்யப்பட்ட அந்த தொகையை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனத் தான் தெரிவித்ததாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உபுல்மலி பிரேமதிலக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, சுங்கத்தால் விதிக்கப்படும் அபராதத்திற்கு உட்பட்டு குறித்த தொகையை விடுவிக்க வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.