மத்திய கிழக்கு போர்: அவசர அழைப்பு விடுத்துள்ள பாப்பரசர் லியோ
மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பாப்பரசர் லியோ (Pope Leo) சர்வதேச சமூகத்திற்கு அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கான அவசர அழைப்பை விடுத்துள்ளார்.
வத்திக்கானில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் உரையாற்றிய அவர், வன்முறை ஒருபோதும் தீர்வாகாது என்றும், அது அப்பாவி மக்களின் துயரத்தை மட்டுமே அதிகரிக்கும் என்றும் கவலை தெரிவித்தார்.
உடனடியாக போர்நிறுத்தம்
குறிப்பாக, கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இந்த மோதலால் லெபனான் மற்றும் ஈரான் பகுதிகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் இடப்பெயர்வுகள் குறித்து அவர் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார்.

போர் ஏழாவது நாளை எட்டியுள்ள சூழலில், பாப்பரசர் தனது உரையில், "ஆயுதங்களின் ஓசை ஓய்ந்து, தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
சர்வதேசத் தலைவர்கள் தங்கள் பிடிவாதத்தைக் கைவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உடனடியாக போர்நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
விரிவடையும் மத்திய கிழக்கின் போர்களம்! துபாய்க்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான் - பதற்றத்தில் வளைகுடா நாடுகள்
பாப்பரசர் லியோ
மனிதாபிமான உதவிகள் தடையின்றி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றடைய அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், புனித பூமி மீண்டும் அமைதிப் பூங்காவாக மாற அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

பாப்பரசர் லியோவின் இந்த அமைதிச் செய்தி, பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் உலகெங்கிலும் உள்ள அமைதி விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.