பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை செல்லும் போராட்டம் சொல்லும் செய்தி என்ன?
எங்கெல்லாம் அடக்கு முறை அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் போராட்டங்கள் வெடிப்பெடுக்கும் என்பதை மனிதக்குல வரலாறு பதிவாக்குகின்றது என கட்டுரையாசிரியர் தி.திபாகரன் M.A தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது கட்டுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இன்று தமிழ் மண்ணில் அத்தகையதோர் அடக்கு முறைக்கு எதிரான மக்கள் போராட்டம் வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்களின் தலைமையில் ''பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை" என்ற கோஷத்துடன் வெடித்து கிழக்கிலிருந்து வடக்கு நோக்கிப் பொங்கிப் பிரவாகித்து ஓடத் தொடங்கிவிட்டது.
இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து சிங்களப் பேரினவாத சக்திகளினால் தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டும், மறுக்கப்படும் போதெல்லாம் தமிழ் தலைவர்களின் அழைப்பிற்கிணங்க எல்லா வகையான ஜனநாயக வழிப் போராட்டங்களிலும் தமிழ் மக்கள் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளனர்.
1956ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனிச்சிங்களச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை அடுத்து கல்லோயா சிங்கள குடியேற்றத்திட்ட வாசிகளினால் அம்பாறையில் சிறுவர்கள், குழந்தைகள் , முதியவர்கள், கற்பிணித்தாய்மார்கள், இளைஞர் , யுவதிகளென 156 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அத்தகைய சூழலில் 1957ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் என்பது அதைச் சிங்கள மக்களுக்கு மட்டுமே உரியது, தமிழ் மக்களுக்கு உரியதல்ல என்று கூறித் தமிழரசுக் கட்சி சுதந்திர தினத்தைக் கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி, பூரண கடையடைப்பு , கறுப்புக் கொடி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது .
தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எங்கும் தமிழ் மக்கள் பூரண ஹர்த்தால், கடையடைப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
அன்றைய நாள் திருமலை நகரில் நடராஜன் என்ற இளைஞர் மணிக்கூட்டுக் கோபுரத்தில் கறுப்புக்கொடி கட்டுவதற்காக ஏறினார்.
அப்போது திருமலை மீன் சந்தையிலிருந்து சிங்களப் பேரினவாதி ஒருவனால் திருமலை நடராஜன் குழல் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவரே சிங்கள அரச எதிர்ப்புப் போராட்டத்தில் களப்பலியான முதலாவது தமிழர் ஆவார். திருமலை நடராசனை சுட்ட சிங்கள பேரினவாதி சிங்கள அரசினால் கைது செய்யப்படவுமில்லை, நீதிமன்றத்தின் முன் யாரும் நிறுத்தப்படவுமில்லை, ஏந்தொரு நீதி விசாரணையும் இடம்பெறவுமில்லை. இதன் பின்னர் பண்டா செல்வா உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு அதுவும் குறுகிய காலத்தில் கிழித்தெறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 1958 ஆண்டு அரசாங்கம் மேற்கொண்ட இனப்படுகொலை கலவரத்தில் தமிழ் மக்கள் வகை தொகையின்றி படுகொலை செய்யப்பட்டனர்.
1960ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த பொதுத் தேர்தல் மூலம் ஜூலை மாதம் ஆட்சிக்கு வந்த ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கம் சிங்கள மொழியை வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் நீதிமன்ற நிர்வாக மொழியாக்கும் சட்ட மூலத்தை அன்றைய நீதி அமைச்சர் சாம் பி சி பெனான்டோ வாயிலாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றியது. இது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தி இருந்தது.
இப்பின்னணியில் தனிச்சிங்களச் சட்டத்தை நாடு முழுவதும் நிர்வாக மொழியாக 1961 ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்துவதென அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிராகப் போராடுவதென ஜனவரி 21ம் திகதி தமிழரசுக் கட்சி தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி பெப்ரவரி 20 ஆம் திகதி மாபெரும் சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ந்து 58 நாட்கள் சத்தியாகிரக போராட்டம் தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரல் 17ஆம் தேதி சிறிமாவோ பண்டார நாயக்கா அரசாங்கம் அவசரக் கால சட்டத்தை பிரகடனப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 18ஆம் திகதி தந்தை செல்வநாயகம் உட்படத் தமிழ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதில் பெரும்பாலானோர் பனாகொடை இராணுவ முகாமில் அடைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சத்தியாகிரக போராட்டம் கைவிடப்பட்டது.
அதேவேளை தமிழரசுக் கட்சி இப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுக்கவில்லை என்பதும், இதேபோன்ற பாரிய அளவிலான போராட்டங்களை அது பின்னாட்களில் முன்னெடுக்கவில்லை என்பதுமான குற்றச்சாட்டுக்களும், இத்துடன் கூடவே பதிவு செய்யப்பட வேண்டியது என்பதும் உண்மை.
எப்படியோ தமிழ் மக்களின் வரலாற்றில் இச்சத்தியாகிரக போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்பதிலும் சந்தேகம் இல்லை.
இப்போராட்டத்தின் போது தமிழ் தலைவர்களின் அழைப்பையேற்று சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் வயோதிபர்கள் என அனைத்து தரப்பினரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
கிழக்கில் குறிப்பாக அம்பாறையில் முஸ்லிம் மக்கள் இந்தப் போராட்டத்தில் பெரும் பங்காற்றினார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
காலத்துக்குக் காலம் தமிழ் மக்களைத் தமிழ்த் தலைவர்கள் போராட்டத்திற்கு அழைத்த போதெல்லாம் மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் தவறியதில்லை. 65, 000ஆண்டு கால தொடர்ச்சி மிக்க தமிழ் மக்களின் பண்பாட்டு வேரில் போர் குணம் உறைந்து கிடக்கின்றது.
போர்க் குணமிக்க தமிழ் பேசும் மக்கள் ஒடுக்குமுறைக்கெதிராக எப்போதுமே போராட அவர்கள் தவறியது கிடையாது.
ஜி ஜி பொன்னம்பலம் ''தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா'' எனக் கோஷமிட்டு அழைக்கத் தமிழ் மக்கள் அவர் பின்னே நின்றார்கள். ஆனால் அவர் அமைச்சுப் பதவியைப் பெற்றுச் செல்ல அவரை அம்போவென்று கைவிட்டார்கள்.
அதற்குப்பின்னர் எஸ்.ஜே.வி. செல்வ நாயகம் அவர்கள் ''அறப்போர் தொடுப்போம், தூக்கு மேடை பஞ்சு மெத்தை, துவக்கு சூடு பந்து விளையாட்டு.'' என்ற கோஷத்துடன் வந்த போது அவருக்குப் பின்னே தமிழ் மக்கள் அணிவகுத்து நின்றனர்.
ஆனால் 1961ஆம் ஆண்டுக்குப் பின்னர் தந்தை செல்வா இத்தகைய பாரிய அறவழிப் போராட்டம் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பதும் அவர் மேற்கொண்டு முன்னேற்ற கரமான பாதையில் பாரிய அளவில் மக்கள் மயப்பட்ட நேரடி போராட்டங்களை முன்னெடுக்கவும் இல்லை என்பது துயரமான உண்மையாகும். 1970ல் தரப்படுத்தல் முறை கொண்டு வரப்பட்டது.
தமிழ் இளைஞர்கள் தரப்படுத்தலுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு விடுதலை இயக்கங்களும் தமிழ் மண்ணில் தோற்றம் பெற்றன. இந்த விடுதலை இயக்கங்களுக்குப் பின்னே இளைஞர்களும் யுவதிகளும் சாரை சாரையாக அணிவகுத்து நின்றனர்.
இந்த நிலையில் 1984 ஆண்டு அன்றைய தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி ''இலங்கை இராணுவத்தில் 23000 படையினர் உள்ளனர் என்றும், ஆனால் பயங்கரவாதிகளின் தொகை 25000 மேல் உள்ளது '' எனவும் குறிப்பிட்டமை இங்கே கவனத்திற்குரியது.
மேற்படி லலித் அத்துலத் முதலியின் தகவலைக் கருத்தில் கொள்ளுகின்ற போது அன்றைய நிலையில் தமிழ் மக்கள் தரப்பில் போராட்டத்திற்கான பங்களிப்புடன் கூடிய ஆதரவு பற்றிய எதார்த்த உண்மை தெளிவாகத் தெரிகின்றது.
மக்கள் போராட்டத்துக்கு தமது பிள்ளைகளைக் கொடுத்தார்கள், உடைமைகளைக் கொடுத்தார்கள் , நகைகளைக் கொடுத்தார்கள் , சாப்பாட்டுப் பசலையும் கொடுத்தார்கள். போராட்டத்திற்குக் காவலாகவும் நின்றார்கள். தமிழ் மக்கள் எல்லாச்சந்தர்ப்பங்களிலும் போராட்ட அழைப்பை ஏற்றுப் போராட்டக் களத்தில் நிற்க தவறவுமில்லை, தயங்கவுமில்லை.
தமிழ் மக்கள் எப்போதும் போர்க் குணம் கொண்டவர்கள் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கடந்த 11 ஆண்டுகளாகப் போராடாமல் தூங்கிக் கொண்டு இருந்தமை தான் பெரும் குற்றச் செயலாகும்.
ஆனால் இப்போது சர்வதேச சூழல் தமிழர்களுக்குச் சற்று கனிவானதாகக் காணப்படும் நிலைமையில் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் எழத்தொடங்கின.
இதற்கு முன் குறிப்பாக ஊடகவியலாளர்கள் , அறிஞர்கள் , மதத்தலைவர்கள் சமூக நலன் விரும்பிகள் மட்டத்திலிருந்து பின்வருமாறு கருத்துக்கள் உருவாக ஏதுவாயின.
அதாவது தமிழ் மக்களுக்குத் தேவையானது எல்லாவகையிலும் ஐக்கியமே என்றும், ஐக்கியமே பலம், ஒற்றுமையே பலம், தலைவர்கள் ஒன்று திரள்வதுதான் இன்றைய முதல் நிலைத் தேவை, இனவாதத்திற்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டும், அதுவே அவசியமானது என்னும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் அவையெல்லாம் புறக்குடத்தில் ஊற்றிய தண்ணீராகப் பயனற்றுப் போயின. தலைவர்கள் எனப்படுவோர் ஒன்று சேர மறுத்தார்கள்.
ஆனால் ஜனாதிபதித் தேர்தலுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் முகங்கொடுத்து இவர்கள் சிதைந்து போன நிலையில் அவர்கள் குறைந்தபட்சக் கூட்டுக்குத் தயாரானார்கள்.
இன்று வரலாறு அவர்களுக்குப் பாடத்தைக் கற்றுத் தருகிறது. தன்னிச்சையாகத் தாம் போன போக்கில் தறிகெட்டுப் போனவர்கள் இன்று ஐக்கியப்பட்டு நிற்கவேண்டிய நிலைக்கு இவர்களை வரலாறு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பது ஓர் ஆரோக்கியமான முன்னேற்றமாகும்.
அத்தகைய பின்னணியில் தான் "பொத்துவிலிருந்து பொலிகண்டி வரை " என்ற போராட்டம் தொடங்கியிருக்கிறது.
தமிழ் தலைவர்களிடையே காணப்பட்ட போட்டி பொறாமைகளின் மத்தியில், கைவிடப்பட்ட ""எழுக தமிழும்"" நீர்த்துப் போகச் செய்யப்பட்ட ""மக்கள் போராட்டங்களும்"" துயர்மிக்க வரலாறான பின்னணியில் இப்பொழுது மீண்டுமொரு பிரம்மாண்டமான மக்கள் போராட்டத்திற்கான சூழல் தோன்றியிருக்கிறது.
அதில் ஒரு சிறு கருவே பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை என்ற போராட்டப் பயணமாகும்.
இலங்கைத் தீவில் தற்போது காணப்படுகின்ற அரசியல் போக்கின் தர்க்கபூர்வ வளர்ச்சி நிலையை அவதானிக்கும் போது ஒன்றின் பின்னான ஒன்றென அதன் தொடர் விளைவுகளின் நிமித்தம் இந்த ஆண்டின் பிற்பகுதியைத் தொடர்ந்து இலங்கைத்தீவின் அரசியலானது நெருப்பாறாகவே இருக்கும் போல் தெரிகிறது.
எது எப்படியிருப்பினும் இவை அனைத்தும் இன ஒடுக்குமுறை என்ற எரிமலையிலிருந்தும் தமிழ் மக்களின் உரிமை என்ற அச்சாணியிலிருந்தும் எழும் நெருப்பாறாகவே அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025





சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
