மேர்வின் சில்வாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முதலாம் பதவிக்காலத்தில் அப்போதைய அமைச்சராக இருந்த மேர்வின் சில்வா, அரச தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினிக்கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியாக நடந்து கொண்டிருந்தார்.
அது குறித்த வழக்கு இன்றைய தினம் (25) கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேலதிக விசாரணை
எனினும் வழக்கு விசாரணைக்கு மேர்வின் சில்வா சமூகமளித்திருக்கவில்லை. அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை என்று அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து வழக்கின் சந்தேக நபராக மேர்வின் சில்வாவைப் பெயரிடுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அத்துடன் வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |