சிறார்களுக்கு மனநல பாதிப்பு - மெட்டா நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் நியூ மெக்சிகோ வழக்கு
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள், சிறார்களை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மனநலத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் தொடரப்பட்ட வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நியூ மெக்சிகோ மாநிலத்தின் சாண்டா ஃபே நீதிமன்றத்தில் தொடங்கியது.
இந்த வழக்கை நியூ மெக்சிகோ தலைமை சட்டத்தரணி ரவுல் டோரெஸ் முன்னெடுத்துள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் தளங்கள் சிறார்களைப் பாலியல் சுரண்டல்களில் இருந்து பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும், அவர்கள் அந்தத் தளங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தவறான தகவல்கள்
முன்னதாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், பாதுகாப்பு அம்சங்கள் குறித்துத் தவறான தகவல்களைத் தந்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதற்காக மெட்டா நிறுவனத்திற்கு 375 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

தற்போது தொடங்கியுள்ள இரண்டாம் கட்ட விசாரணையில், மெட்டா நிறுவனம் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தால், பில்லியன் கணக்கிலான டொலர்கள் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதுமட்டுமின்றி, சிறார்களுக்கான வயது சரிபார்ப்பு, ஆட்டோபிளே வசதியை நீக்குதல் மற்றும் அல்காரிதம்களை மாற்றியமைத்தல் போன்ற கடுமையான மாற்றங்களைச் செய்ய மெட்டா நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிடக்கூடும்.
ஆனால், சமூக வலைதளங்களால் மனநலப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இல்லை என்று மெட்டா நிறுவனம் வாதிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.