மட்டக்களப்பு சிறையில் கணவரை அடித்துக் கொலை செய்துள்ளனர்: மனைவி குற்றச்சாட்டு
தனது கணவரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைத்து அடித்துக் கொலை செய்துவிட்டார்கள் என்று கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன் தனது கணவரை கொலை செய்தவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதால் தனக்கு நீதி கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில், எனது கணவரான சோமசுந்தரம் துரைராஜா வியாபாரம் செய்து வருபவர். எமக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
பிரேத பரிசோதனை
கசிப்பு தொடர்பான வழக்கு ஒன்றில் கணவர் நீதிமன்றத்தில் முன்னிலையான போது அவருக்கு நீதிமன்றம் பிடியாணை வழங்கியிருந்தது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 22 ஆம் திகதி அவரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைது செய்திருந்தனர். பின்னர் 23 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி பிணையில் எடுக்க நாங்கள் செல்ல முடியாத காரணத்தால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கணவரை கடந்த 27 திகதி செவ்வாய்க்கிழமை சிறைச்சாலையில் பார்வையிடுவதற்கு நானும் எனது மகளும் சென்றிருந்தோம். இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகள் சுமார் 30 நிமிடத்தின் பின்னர் உங்களது கணவன் சுகயீனமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது எனது கணவரின் உடல் பிரோத அறையில் வைக்கப்பட்டிருந்தது.
அவரின் உடலில் கால் கை, தலை, நெஞ்சு பகுதியில் அடிக்கப்பட்ட காயம் இருப்பதாகவும் பிரேத பரிசோதனையின் பின்னர் தெரிவிப்பதாக தெரிவித்து பிரேத பரிசோதனையின் பின்னர் 30 ம் திகதி வெள்ளிக்கிழமை சடலத்தை ஒப்படைத்தனர்.
மனித உரிமை ஆணைக்குழு
எனது கணவன் பொல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அவருடன் சிறைக்கூடத்தில் இருந்த கைதிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களுக்கு தெரியும் யார் எனது கணவனை அடித்து கொலை செய்தது என்ற விடயம்
எனவே கணவரை கொலை செய்தவர்களை நீதியின் முன்னர் நிறுத்தவேண்டும். சிறையிலேயே பாதுகாப்பு இல்லை.
இவ்வாறு கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சிறைச்சாலை காவலர்கள் பொறுப்பு கூறவேண்டும்.
அவர்களுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளேன். பொலிஸாரிடம் இருந்நு பக்கசார்பற்ற விசாரணை வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
காசா மீது மீண்டும் இஸ்ரேல் உக்கிரத் தாக்குதல்: நூற்றுக்கணக்கில் பலியான மக்கள் - நிராகரிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் கோரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |