ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிக்கி உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து களுவாஞ்சிகுடியிலும் அஞ்சலி
இலங்கையில் ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 16ஆவது ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இலங்கையின் பல பகுதிகளிலும் நினைவு கூரல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிக்கி உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி இளைஞர் முன்னேற்ற விளையாட்டுக் கழகத்தின் ஏற்பட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், சுனாமியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மண்முனை தென்எருவிப் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், அக்கட்சியின் உபதலைவருமான என். நகுலோஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது களுவாஞ்சிகுடி கடற்கரையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தி, அகவணக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



