சவேந்திர சில்வாவிற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியிடுமாறு கோரிக்கை
பிரித்தானியாவின் லீட்ஸ் கிழக்கு (Leeds East) நாடாளுமன்ற உறுப்பினர் றிச்சட் பர்கனுடன் ( Richard Burgon MP) உயர்மட்ட சந்திப்பு ஒன்று நேற்று(10/02/2023) இணையவழியாக இடம்பெற்றுள்ளது.
இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க் குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகார சபையின் கீழ்(Global Human Rights Sanction Regime) தடைசெய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு,சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
போர்க் குற்றவாளிகளுக்கு தடை
இந்த சந்திப்பில்,கீத் குலசேகரம் தனது தலைமை உரையின் போது, இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் அப்பாவி தமிழ்மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்ய போதுமான ஆதாரங்களை ஏற்கனவே ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் சமர்ப்பித்துள்ளது.
இருப்பினும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு(FCDO) இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள்கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடிசாட்சி என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தங்கள் தொகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்யக் கோரி FCDO விற்கு அழுத்தம் கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு நீதியினைப் பெற்றுக்கொள்ளவதற்கு ஏதுவாகவும் தொடர்ந்து இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகளை நிறுத்துவதற்கு ஏதுவாகவும் தமிழர்களிற்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்குழு(APPGT) மற்றும் மக்நிட்ஸ்கை தடைகளிற்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுக்களில்(APPG for Magnitsky Sanctions) இணைந்து செயற்பட அழைப்பு விடுத்ததுடன் சவேந்திர சில்வாவினை தடை செய்யக்கோரும் சிறிய காணொளியினை சமூக வலைத்தளங்களில் வெளியிடுமாறும் கேட்டுக்கொண்டார்.
SLC அமைப்பின் பிரச்சாரப் பணிப்பாளர் பென்ஜமின் குமார் மொறிஸ் உரையாற்றும் போது இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சவேந்திரசில்வா மீதான தடை முழுமையான தீர்வாக அமையாது என்ற போதிலும், நீதி நடவடிக்கைக்கு ஆரம்ப கட்டமாக இருக்கும் என்றும் தொடரும் சித்திரவதைகளை தடுக்க வழிவகுக்கும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழர் பங்களிப்பின் முக்கியத்துவம்
Redress அமைப்பு சார்பாக நட்டாலியா உரையாற்றும் போது, இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களிற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தடைசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய சென்கந்தையா, இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்வதற்கு அனுப்பிய கோரிக்கைகளுக்கு சரியான பதிலை FCDO தராதது வருத்தத்தை தருவதுடன், அமெரிக்கா,கனடா போன்ற நாடுகள் தடை செய்த பின்னும் பிரித்தானியா தயங்குவது ஏன் என்றும் மேலும் பிரித்தானியா பொருளாதாரத்தில் தமிழர் பங்களிப்பின் முக்கியத்துவதையும் எடுத்துரைத்துள்ளார்.
அத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகத்துடன் தமிழர்களிற்கு சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்திதருமாறு கேட்டுக்கொண்டார்.
அம்பிகைக செல்வகுமார் தனது உரையின் போது, கடந்த ஒரு சில மாதங்களிற்கு முன்னர் சித்திரவதைக்கு உள்ளாகியவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாக்குமூலங்கள் மற்றும் ஆதாரங்களை ICPPG திரட்டிவைத்திருப்பதாகவும், வயது வேறுபாடு இன்றி தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதற்கும், யுத்தம் முடிந்து 13 வருடங்கள் ஆகியும் இனப்படுகொலை தொடருவதற்கான ஆதாரங்களையிம் திரட்டி ICPPG ஐநாவுக்கு வழங்க வருவதையும் குறிப்பிட்டார்.
சித்திரவதையில் தப்பி வந்தவர்களை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டார்.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகத்துடன் சந்திப்பு மேற்படி சந்திப்பில் சித்திரவதையில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களான கமல் வாசன், மற்றும் நிலக்ஐன் சிவலிங்கம் ஆகியோரும், ICPPG அமைப்பின் சார்பில் கிறிஸ்ரி நிலானி காண்டீபன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதுடன் FCDOவிற்கு தங்கள் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்யக் கோரி அழுத்தம் கொடுப்பதாகவும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகத்துடன் சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்தி தருவதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் இரு அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுக்களிலும் இணைய சம்மதித்ததுடன் தனது முழுமையான ஆதரவை தர உறுதியளித்துள்ளார்.
இந்த சந்திப்பில்,The Sri Lanka Campaign for Peace and Justice(SLC) அமைப்பின்
பிரச்சாரப் பணிப்பாளர் பென்ஜமின் குமார் மொறிஸ்(Benjamin Kumar Morris),
தொழில்கட்சிக்கான தமிழர்கள்(Tamils For Labour) அமைப்பின் தலைவர் சென் கந்தையா, இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின்(ICPPG) பணிப்பாளர் அம்பிகை.க.செல்வகுமார் மற்றும் REDRSS அமைப்பின் சட்ட அலுவலர் நட்டாலியா குபிசச் (Natalia Kubesch)ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.