70 கேள்விகளுடன் விடுதலைப் புலிகளின் தலைவருடனான சந்திப்பு! காலம் கடந்து வெளிவரும் நேர்காணல்
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான 70 கேள்விகள் அடங்கிய முழுமையான நேர்காணலை விரைவில் வெளியிடுவதாக மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான அருட்தந்தை ஜெகத் கஸ்பார் ராஜ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நேர்காணல் செய்த ஒரு ஒளிப்பதிவொன்றை ஜெகத் கஸ்பார் ராஜ் அடிகளார் அண்மையில் வெளியிட்டிருந்தார்.
கிட்டத்தட்ட 18 ஆண்டுகளின் பின்னர் காலம் கடந்த வெளியீடாக அந்த நேர்காணல் அமைந்திருந்ததே! ஏன் என இதன்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
முதலில் நான் 2002ஆம் ஆண்டு குறித்த பதிவினை செய்த போது அதனை உடனடியாக ஒலிபரப்ப வேண்டிய தேவை கருதி நான் செய்த பதிவு அல்ல.
ஒரு மாபெரும் தலைவனின் போர் பக்கத்திலான முகமே இந்த உலகிற்கு தெரிந்திருந்தது. போர் களங்களில் இராணுவ வியூகங்களுக்கு அப்பால் அந்த ஆளுமையின் தரிசனங்கள் என்ன, அது எப்படிப்பட்ட ஆளுமை என்பனவற்றையெல்லாம் பதிவு செய்வதற்காக நாம் எடுத்துக் கொண்ட ஒரு முயற்சி தான் அந்த நேர்காணல்.
70 கேள்விகள். அந்த முழுமையான நேர்காணல் இன்னமும் வெளியிடப்படவில்லை. விரைவில் நிச்சயமாக வெளியிடுவேன்.
கிளிநொச்சியில் ஒற்றை கமராவை வைத்து செய்யப்பட்ட பதிவு தான் அந்த நேர்காணல். அந்த நேர்காணல் வெளியிடப்பட வேண்டுமென இரு தரப்பிடமிருந்து வேண்டுகோள் வந்தது.
அந்த இரண்டு தரப்பையும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் 2002 காலப்பகுதியிலேயே சர்வதேச அளவில் அனைத்துலக அளவில் இயக்கம், வெளியே தெரியவில்லை என்றாலும் இரண்டாக பிளவுபட்டுவிட்டது என்று சொல்லலாம்.
கஸ்ரோ அணி, கே.பி அணி என்பதாக சாடையாக ஒரு பிரிவு வந்தது. ஒரு தரப்பினர் ஒரு ஊடகத்திற்கும், மற்றைய தரப்பினர் இன்னொரு ஊடகத்திற்கும் வெளியிட கோரினார்கள். நான் இந்த உள் பிரச்சினைகளுக்குள் அதிகமாக சென்று சிக்குப்பட விருப்பம் இல்லாத ஒரு எண்ணம் அந்த காலகட்டத்திற்குள் இருந்தது. உள்சிக்கலினால் இந்த காலதாமதம் ஏற்பட்டது.
அதன் பின்னர் போர் தொடங்கி போர் முன்னேறிய காலத்தில் இந்த நேர்காணலை வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது என நான் கருதியிருந்தேன். 2009இற்கு பின்னர் என்பது ஒரு வலியும், சலிப்புமான காலமாக இருந்தது.
புலிகள் இங்கு வேடம் தரித்து உலவிய காலம். உண்மையில் எப்படியாவது இந்த போராட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்று முயற்சி எடுத்தவர்கள், அதற்கான வியூகங்கள், உத்திகள் வகுத்தவர்கள் எல்லாம் துரோகிகளாகவும் இந்த போராட்டத்தோடு எவ்வித தொடர்புகளும் இல்லாமல் இருந்தவர்கள் புதிய கதாநாயகர்களாகவும், இந்த போராட்டத்தின் ஏதோவொரு வகையில் அழிவிற்கு காரணமானவர்கள் கதையாளிகளாகவும் வந்து நின்ற காலகட்டம்.
இந்த விடுதலைப் போராட்டத்தில் நாம் என்ன செய்தோம் என்பதை வெளிப்படையாக சொல்வதற்கு கூச்சமாக இருந்தது.
காரணம் அன்று உடலில் வெடிமருந்து பொருத்திக் கொண்டு தன் உடலையே ஆயுதமாக்கி செல்கின்ற போராளிகளின் தியாகத்தோடு ஒப்பிடும் போது நானோ, என் போன்றவர்களோ, நம் போன்றவர்களோ என்ன தான் தியாகங்கள் பங்களிப்புகளை செய்திருந்தாலும் அது ஒப்பீட்டுக்குரியது அல்ல.
அதை நான் வெளிப்படையாக சொல்வதே ஒரு வெட்கம். அக்காலகட்டத்தில் உண்மையாக உழைத்தவர்கள் மௌனமாகிவிட ஒரு தரப்பினர் பொய்களை கூறிக்கொண்டு தலைவர் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார், அங்கே படைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்று இந்த போராட்டம் தன்னை மீள வந்துவிடக் கூடாது என திட்டமிட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என தெரிவித்துள்ளார்.