மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சந்திப்பு
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் முல்லைத்தீவு மாவட்ட மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேற்று(04) மாலை முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாச கட்டிடத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் இந்திய இழுவைப் படகுகள் இனி எமது எல்லைக்குள் வராது எனவும் அவ்வாறு வந்தால் அவை கைது செய்யப்படும் எனவும் அமைச்சர் மீனவர்களுக்கு உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அண்மையில் மீனவர்கள் மேற்கொண்ட கடல்வழி போராட்டம் தொடர்பில் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இதன்போது சில மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூட்டத்திலிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர். இதனை விடவும் இந்திய இழுவைப் படகுகளால் வலைகள், மீன்பிடி உபகரணங்கள் சேதமாக்கப்பட்ட எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த விசேட வாழ்வாதார திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் உள்ளிட்ட களப்புக்களிலும் கடலிலும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களைக் கைது செய்யுமாறும் அவற்றுக்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, பொலிஸாரையும் குறித்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
அத்தோடு நாளாந்த அறிக்கைகளை தனக்கு அனுப்பி வைக்குமாறும் இது தொடர்பில் அடுத்து வரும் சில நாட்களில் முல்லைத்தீவு வருகின்ற போது இதன் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதாகவும் கூறினார் .
இதனைவிட கரைவலைப் பயன்பாடுகளுக்கான நிரந்தர அனுமதிகளைப் பெற்றுத்தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தமைக்கு நில அளவீட்டுப் பணிகள் நிறைவடைந்து வருவதாகவும் மிகவிரைவில் அதனைச் செய்துதருவதாகவும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத வெளிமாவட்ட மீனவர் வருகையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கரைவலைத் தொழில் புரியும் இடத்தில் கடலுக்குள் உள்ள கழிவுகளை அகற்றித் தருமாறும் அமைச்சரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும் கடற்றொழில் அமைச்சருக்கும் கனடா செல்வதற்காக நாட்டை விட்டு வெளியேறிய, இந்தியாவில் தங்கியிருந்த போது இந்தியாவில் இந்திய காவல்துறையினரால் பிடிபட்டு இந்தியாவின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் இந்தியாவில் இந்திய காவல்துறையினரால் பிடிபட்டு இந்தியாவின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்தும் கனடா செல்வதற்காக முகவர் ஊடாக இரண்டு பிரிவுகளாக இந்தியா சென்று அங்கு தங்கியிருந்த நிலையில், இந்தியாவின் கர்நாடகாவிலிருந்து இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதமாகக் கனடாவுக்கு செல்வதற்காக வருகை தந்திருப்பதாக அம்மாநில பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக பொலிஸார், பெங்களூரில் சட்டவிரோதமாகத் தங்கி இருந்த 38 பேரைக் கைது செய்ததோடு, தமிழகத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இலங்கைத் தமிழர்கள் 23 பேரைத் தமிழ்நாட்டு பொலிஸார் கைது செய்தனர். இவர்கள் கடந்த 10.06.2021 அன்று கைது செய்யப்பட்டிருந்தனர்.
தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்ட 23 பேரைத் தமிழ்நாட்டு பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது திருச்சி சிறப்பு முகாமில் உள்ளனர்.
இதேவேளை பெங்களூரில் சட்டவிரோதமாகத் தங்கி இருந்து கைது செய்த 38 பேரைக் கர்நாடக பொலிஸார் பெங்களூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்கள் 38 பெரும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இரண்டு சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளவர்களில் முல்லைத்தீவை சேர்ந்த 42
போரையும் விடுவித்துத் தருமாறு அவர்களின் உறவினர்கள் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தவிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















