இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் (Photos)
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் இடம்பெற்றுள்ள நிலையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகச் செந்தில் தொண்டமானும், தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டகலையிலுள்ள சி.எல்.எவ் வளாகத்தில் இன்று முற்பகல் இக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட உயிரிழந்த கட்சி செயற்பாட்டாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், பிரமுகர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பின்னர் காங்கிரஸின் முக்கிய பதவிகளுக்கான தேர்வுகள் இடம்பெற்றன. இதன்போது தலைவராகச் செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டார். தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டார்.
நிதிச்செயலாளர் பதவியும் மருதபாண்டி ராமேஸ்வரன் வசமே உள்ளது. இப்பதவிகளுக்குப் போட்டி நிலவவில்லை. அதன்பின்னர் பிரதித் தலைவர் உட்பட இதர பதவிகளுக்கு வாக்கெடுப்புமூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதன்படி பிரதித் தலைவர்களாக மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான கணபதி கனகராஜும், அனுசியா சிவராஜாவும் தெரிவாகினர்.
பிரதித் தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரையும், அரசியல் தேசிய அமைப்பாளராக முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சக்திவேலும், தொழிற்சங்க பிரிவு தேசிய அமைப்பாளராக லோகதாஸ், பிரதி பொதுச்செயலாளராக செல்லமுத்தும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
அரசியல் பிரிவு உதவி தேசிய அமைப்பாளராக ராஜமணி பிரசாந்தும், தொழிற்சங்க பிரிவு உதவி தேசிய அமைப்பாளராகப் பழனி சசிக்குமாரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸின் போசகர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் மற்றும் சிவராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிலிப்குமார், யோகராஜ், சென்பகவள்ளி, சச்சிதானந்தன், அசோக்குமார், சிவலிங்கம், பாரத் அருள்சாமி, சிவஞானம், பாஸ்கரன், மார்கட் மேரி, ராஜமணி, செல்லசாமி திருகேதீஸ் ஆகியோர் உபதலைவர்களாக நியமிக்கப்படடனர்.
இந்நிகழ்வின் பின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் செய்தியாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்,
" இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு இளம் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இருந்தபோது தனிநபராக முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் கட்சிக்கென மூத்த சட்டத்தரணிகள் உள்ளனர், போஷகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் கலந்துரையாடி - கட்சியாகவே இனி முடிவுகள் எடுக்கப்படும். அரசியல் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு யாப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிகாரங்கள் உரியவகையில் பகிரப்பட்டுள்ளன.
இளைஞர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். தேசிய சபைக்குக் கணக்கு, வழக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. நாம் அரசியல் செய்தாலும் தொழிற்சங்கம்தான் பிரதானமானது. ஏனைய தொழிற்சங்கங்கள், தொழிற்சங்கம் என்ற போர்வையில் அரசியலையே செய்கின்றன. முடித்தால் கணக்கு வழக்கைக் காட்டட்டும்." இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நிகழ்வின் பின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவரும், பிரதம அமைச்சரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் செய்தியாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்,
" நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எமது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமையிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது தொடர்பில் தேசிய சபையில் ஆராயப்பட்டது. எமது மக்களின் உரிமைகளுக்காகவும், பொருளாதார எழுச்சிக்காகவும் நாம் தொடர்ந்து தீவிரமாகச் செயற்படுவோம்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சந்தா பெறாத சங்கமாக மாறவேண்டும் என்பதே மறைந்த தலைவரின் இலட்சியமும்கூட. அதனை நாம் நிறைவேற்றுவோம். தற்போது சந்தா பெற்றாலும் கணக்கு விவரம் உரியவகையில் காண்பிக்கப்படுகின்றது. அரசிலிருந்து வெளியேறுவது சம்பந்தமாக இன்று கலந்துரையாடப்படவில்லை. " இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வின் பின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நிதி செயலாளருமான மருதபாண்டி ரமேஷ்வரன் செய்தியாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்,
''இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அரச பங்காளிக்கட்சியாக இருந்தாலும் - எமது மக்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் ஒருபோதும் மௌனம் காத்தது கிடையாது. எனவே, காங்கிரஸை நம்புங்கள். அந்த அமைப்பு உங்களை ஒருபோதும் கைவிடாது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வளர்ச்சிக்குப் பலர் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
காங்கிரஸில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகளவு அங்கத்தவர்களாக உள்ளனர். இம்முறை தேசிய சபையில் இளைஞர்களும், பெண்களும் முன்னுரிமை வழங்கப்பட்டு பதவிகள் வழங்கப்பட்டது. காங்கிரசுக்குச் சோதனை வந்த காலக்கட்டங்களில் எல்லாம் நீங்கள் எமக்கு பக்க பலமாக இருந்துள்ளீர்கள். இனியும் இருப்பீர்கள். நாமும் உங்களைக் கைவிடமாட்டோம்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, விலைவாசி உயர்ந்துள்ளது. இவை
பற்றி காங்கிரஸ் கதைப்பதில்லை என சிலர் விமர்சிக்கின்றனர். நாம் அரச
பங்காளிகளாக இருந்தாலும், மக்களுக்குப் பிரச்சினை என்றால் மௌனம் காக்கமாட்டோம்''
இவ்வாறு தெரிவித்துள்ளார்.