மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் (Photos)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மாதாந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான செந்தில் தொண்டமான் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று(27.06.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதியில் சட்ட விரோதமாக குடியேறியுள்ளவர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவினை இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்றுமாறு கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் மகாவலி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.
அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவினை மதித்துசெயற்படவேண்டும் எனவும் இல்லாதுவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு என்ற நிலையினை எதிர்கொள்ள நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம் (டெங்கு ஒழிப்பு), சுற்றாடல், கடற்றொழில் உட்பட்ட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநர் உடன் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளை பணித்துள்ளார்.
கால்நடைகளுக்கு அச்சுறுத்தல்
இதனையடுத்து மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைப்பகுதியில் கால்நடை பண்ணையாளர்கள் தொடர்ச்சியான பிரச்சினைகளை எதிர்கொண்டுவருவதாகவும்,
நீதிமன்றத்தினால் சட்டவிரோத குடியேற்றத்தினை மேற்கொண்டவர்களை வெளியேற்றுமாறு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் அந்த உத்தரவினை மகாவலி அபிவிருத்தி திணைக்களம் இதுவரையில் நடைமுறைப்படுத்தவில்லையென இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டிருக்குமானால் அப்பகுதியில் கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்றிருக்காது நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது அனைவரது கருத்தினையும் கருத்தில்கொண்ட கிழக்கு மாகாண ஆளுனர், நீதிமன்ற கட்டளையினை அதிகாரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இரண்டு வார காலத்திற்குள் குறித்த உத்தரவினை நிறைவேற்றுமாறும் கோரிய நிலையில் அதனை நிறைவேற்றுதாக மகாவலி திணைக்கள அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
அத்துடன் மாவட்டத்தின் தற்போதைய சுய நிலைத்தன்மையை மேம்படுத்த புதிய வளர்ச்சி திட்டங்களை வகுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வியாழேந்திரன்,நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் அரசாங்க அதிபர்கள் , அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |













