இலங்கை சாரணர் இயக்கத்துக்கும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு
இலங்கை சாரணர் இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.
குறித்த கலந்துயைாடலானது இன்று(10.9.2026) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள 11ஆவது தேசிய சாரணர் ஜம்போரி தொடர்பிலும், அதன் அமைப்பு முன்னெடுக்கும் பணிகளின் தற்போதைய நிலைமை மற்றும் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
கருத்துப் பரிமாற்றங்கள்
இதன்போது, தேசிய சாரணர் ஜம்போரியின் உத்தியோகபூர்வ சின்னம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
இலங்கை சாரணர் இயக்கத்தால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாகவும் கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சாரணர் இயக்கத்தை அதிகளவிலான பாடசாலைகளுக்கு விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும், அரசு முன்னெடுத்து வரும் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டங்களுக்கு சாரணர் இயக்கம் வழங்கக்கூடிய பங்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பிலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைவர் ரன்சிரி பெரேரா, இலங்கை சாரணர் இயக்கத்தின் பிரதிப் பிரதம ஆணையாளர் (பதில்) கபில பெரேரா, செயற்குழுத் தலைவர் கமல்நாத் ஜினதாச, ஜம்போரி இணை அமைப்பாளர் ஆணையாளர் பொறியியலாளர் அமில் அபேசுந்தர உள்ளிட்ட இலங்கை சாரணர் இயக்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.