முல்லைத்தீவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மருத்துவ சேவை மறுப்பு
முல்லைத்தீவு- உண்ணாப்புலவு பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக 30க்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் வருகை தந்திருந்த நிலையில், அவர்களுக்கு உரிய மருத்துவ சேவை வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கர்ப்பிணித் தாய்மார்கள் பல மணி நேரமாக வைத்தியசாலையில் காத்திருந்த நிலையில், அங்கு பணியாற்றும் பெண் வைத்தியர் தாம் அவர்களைப் பரிசோதிக்கப் போவதில்லை எனத் தெரிவித்ததுடன், மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்படமாட்டாது எனக் கூறியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை கேட்டறிந்துள்ளார்.
மருத்துவ பரிசோதனை
இதனையடுத்து அவர் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, உண்ணாப்புலவு வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் சேவை வழங்காது இருந்ததனால் மூன்று வைத்தியர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு கர்ப்பிணித் தாய்மார்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எழுத்துமூலம் முறைப்பாடு ஒன்றையும் வழங்கியுள்ளார்.

அந்த முறைப்பாட்டில், கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளிட்ட விசேட கவனம் தேவைப்படும் நோயாளிகளுக்கு முன்கூட்டியே உரிய மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டிய நிலையில், மருத்துவ சேவை வழங்கப்படாமல் அவர்களை திருப்பி அனுப்புவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவசர அல்லது அத்தியாவசிய மருத்துவ சேவை தேவைப்படும் நோயாளிகளுக்கு தடையின்றி மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
