உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள்! நீதிமன்றில் வெளியான தகவல்
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சலே சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார் என்பதை மனநல மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தவில்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், மருத்துவ அறிக்கை தொடர்பில் அரச தரப்பு முன்வைத்த விளக்கத்தை சுரேஷ் சல்லே சார்பிலான சட்டத்தரணி பானுக மலவியாராச்சி மறுத்துள்ளார்.
மருத்துவ அறிக்கையில் இது தொடர்பில் இறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றும், மாறாக மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறே பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தகவல்கள்
2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் பல புதிய தகவல்கள் நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளன.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(25) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் இந்தத் தகவல்களை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
இதன்போது, 2020ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 15 மற்றும் 16ஆம் திகதிகளில், சுரேஷ் சலேவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஆவணப்படத்தில் தோன்றிய ஆசாத் மௌலானாவும் தத்தமது குடும்பத்தினருடன் அஹுங்கல்ல பகுதியில் உள்ள ஒரே ஹோட்டலில் தங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் இந்தச் சந்திப்பு தற்செயலாக இடம்பெற்றதாக சுரேஷ் சலே தெரிவித்திருந்த போதிலும், தொலைபேசி அழைப்புப் பதிவுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் அவர் தனது விளக்கத்தை மாற்றியதாக மேலதிக மன்றாடியார் நாயகம் குறிப்பிட்டார்.
இந்தச் சூழ்நிலைச் சான்றுகள் ஆசாத் மௌலானா முன்வைத்த சில குற்றச்சாட்டுகளுக்கு நம்பகத்தன்மை அளிப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
முன்னரே தெரிந்த உண்மை
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னரே சஹ்ரான் ஹாஷிமின் செயற்பாடுகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
'தம்பி அண்ணா' என அழைக்கப்படும் தகவல் வழங்குநர் மூலம், 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சஹ்ரான் ஹாஷிம் இந்தியாவில் குழுவொன்றுடன் பயிற்சி பெற்று, 2019ஆம் ஆண்டு தாக்குதலொன்றை நடத்தத் தயாராகி வருவதாகத் தகவல் வழங்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
இந்தத் தகவல் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதுடன், அது தொடர்பான கோப்பொன்றும் பராமரிக்கப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் குறித்த கோப்பு சுரேஷ் சலேவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது காணாமல் போயுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததாக மேலதிக மன்றாடியார் நாயகம் குறிப்பிட்டார். இந்தக் கோப்பு மறைக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் சுரேஷ் சலே சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
இது தொடர்பில் நிபுணத்துவ மருத்துவர்களைக் கொண்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
மருத்துவ அறிக்கை
311 பக்கங்களையும் 1,185 பந்திகளையும் கொண்ட மனநல மருத்துவ அறிக்கையில், சுரேஷ் சலே சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக உறுதிப்படுத்தும் இறுதி முடிவு எதுவும் முன்வைக்கப்படவில்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்தார். சுரேஷ் சலே 95 வாக்குமூலங்களையும், அவரது மனைவி சுமார் 30 வாக்குமூலங்களையும் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சலே உளவியல் ரீதியான பாதிப்புகள் தொடர்பில் தெரிவித்திருந்தாலும், உடல் ரீதியான சித்திரவதைகள் குறித்து மருத்துவக் குழுவிடம் தெரிவிக்கவில்லை என்றும் அரச தரப்பு குறிப்பிட்டது.
எனினும், சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பானுக மலவியாராச்சி, மருத்துவ அறிக்கை தொடர்பில் அரச தரப்பு முன்வைத்த விளக்கத்தை மறுத்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தனது கட்சிக்காரரின் ஆடைகளைக் களைந்து பரிசோதித்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறையற்ற செயற்பாடு தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தின் சிசிடிவி காட்சிகள் சுமார் 30 நாட்கள் மட்டுமே சேமித்து வைக்கப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
கோட்டாபய ராஜபக்ச சந்தேகநபர்
இதன்போது, மருத்துவ அறிக்கையில் குறித்த சம்பவம் முறையற்ற செயற்பாடாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா என நீதவான் வினவியதற்கு, அதனை உறுதிப்படுத்தும் வகையில் இறுதி முடிவு எதுவும் மருத்துவக் குழுவால் வழங்கப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி விளக்கமளித்தார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் இந்த வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடுவதற்குப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகத் தாம் கருதுவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எனினும், அவரைக் கைது செய்வது தொடர்பான தீர்மானத்தை விசாரணை அதிகாரிகளே எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, கோட்டாபய ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிடுவது தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தி, அதன் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார்.
மேலும், குறித்த வழக்குடன் தொடர்புடைய வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு கோட்டாபய ராஜபக்ச சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.
இதனையடுத்து, வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டார்.