மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு: ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கை
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக, ஓராண்டு காலத்திற்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 59 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளியான அறிக்கையின்படி, கடந்த 2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்திற்கு 5,277 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
மருத்துவ உதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவு
அதே போன்று, கடந்த 2024 ஆம் ஆண்டில் 3,313 விண்ணப்பங்களும், 2023 ஆம் ஆண்டில் 3,456 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன.

இதன்படி, 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் 1,964 மேலதிக விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. விண்ணப்பதாரர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு ஏற்கனவே மருத்துவ உதவிகள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டில், வடக்கு மாகாணத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் 253 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
அதே சமயம், கிழக்கு மாகாணத்தில் 135 சதவீதத்தாலும், மத்திய மாகாணத்தில் 116 சதவீதத்தாலும், ஊவா மாகாணத்தில் 108 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது.
புதிய வேலைத்திட்டம்
கடந்த 47 வருடங்களாக கொழும்பிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ளும் நடைமுறை 2025 பெப்ரவரி 07ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தின் வெற்றியினைத் தொடர்ந்து, ஏனைய சேவைகளும் பரவலாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வறுமை ஒழிப்பு மானியங்கள், கல்விப் புலமைப்பரிசில்கள், விசேட தேவையுடையோருக்கான உதவிகள், யானைத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்கள் மற்றும் அவசர அனர்த்த உதவிகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் பொதுமக்கள் தற்போது தமது பிரதேச செயலகங்கள் ஊடாக இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.