மீன்பிடி அமைச்சர் மீது மீனவ சங்கங்களின் கூட்டிணைவு மற்றும் மக்கள் போராட்ட இயக்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
மீனவ சங்கங்களின் கூட்டிணைவு, மக்கள் போராட்ட இயக்கம் ஆகியவற்றின் ஊடக சந்திப்பு இன்று (21.10.2026) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது கடற்றொழில் இணையங்களின் ஊடக பேச்சாளர் அ.அன்னராசா, எம்.பி.சுப்பிரமணியம், மக்கள் போராட்ட இயக்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எம்.பி.சுப்பிரமணியம் கூறுகையில், நீண்ட காலமாக பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். இதுவரையும் அரசாங்கத்தின் ஐந்து கால கட்டத்தில் அமைச்சர்களைக் கேட்டுள்ளோம். தற்போதுள்ள அமைச்சர் மீன்பிடி சார்ந்து எவ்வித விடயமும் தெரியாது. கடந்த அமைச்சர் வயிற்றுப் பிழைப்பிற்காக பல மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
வாழ்வாதாரத்தில் பாரிய நெருக்கடி
தற்போதுள்ள அமைச்சரும் தமக்குத் தனக்குத் தேவையானவர்களுக்கு மாத்திரம் அன்பைப் பகிரும் வகையில் கடற்தொழிலாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தில் பாரிய நெருக்கடிகளை வழங்கி வருகின்றார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை அ.அன்னராசா தெரிவிக்கையில், கடற்தொழிலாளர்களுடன் தொடர்ச்சியாக பல தடவைகள் பேசி இருக்கிறோம். யாழ். மாவட்ட உதவி பணிப்பாளரிடம் இது தொடர்பில் முறைப்பாடுகளை முன் வைத்திருக்கின்றோம். இருப்பினும் நமக்கு எந்த விதத்திலும் தீர்வு கிடைக்கவில்லை. கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரனை மாற்ற வேண்டும். முதலாளிகளின் கோரிக்கைகளை மாத்திரம் நிறைவேற்றிக் கொண்டு அவர்களுடன் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கின்றார்.
கோரிக்கை முன்வைப்பு
அன்றாடம் உழைக்கின்ற கடற்தொழிலாளர்களின் தேவைகளை அமைச்சர் பூர்த்தி செய்வதில்லை. தமது பிரச்சினைகள் தொடர்பில் கடந்த காலங்களிலும் கடல் தொழில் அமைச்சராக செயல்பட்டவரிடம் கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். இப்போது புதிய அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சர் கூட விமத விடயத்தில் பாராபட்சமாகவே நடந்து கொள்கிறார்.

அவர் அட்டை பண்ணைகள் புதிய தொழில் முனைவோரை வைத்துக் கொண்டு உமது கடலை நிறுவனங்களுக்கு விற்பனை செய்கிறார். எமது தொடர்ச்சியான பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் தென்னிலங்கை கடற்தொழிலாளர்களுடனும், தென் இலங்கை பிரதிநிதிகளோடும் இணைந்து பாரிய போராட்டங்களை தொடர்ந்து மேற்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.