வடக்கில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை முன்னெடுப்பு
வடக்கின் பல்வேறு பகுதிகளில் டெங்கு பரவுதலை தடுப்பதற்கான விசேட நடவடிக்கைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் யாழ்ப்பாணம் - வடமராட்சி, திக்கம் மானாண்டி பகுதியில் டெங்கு நோய் பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் சிரமதான பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த சிரமதான நடவடிக்கையானது இன்று(07) காலை 9.00 மணியளவில் திக்கம் கலாச்சார மத்திய நிலைத்திலிருந்து ஆரம்பாமானதுடன் மானாண்டி சந்தைவரை இடம்பெற்றுள்ளது.
இதன்போது அங்கு சமூக பொறுப்பில்லாது வீசப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகள் உட்பட டெங்கு நுளம்பு உற்பத்தியாகுமிடங்களும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒலிபெருக்கியில் டெங்கு கட்டுப்படுத்தல் தொடர்பான சுகாதார விழி்ப்புணர்வு ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இச்சிரமதான நடவடிக்கையில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோகதர் பிரியந்த அமரசிங்க தலமையிலான போலீசார், கடற்படையினர், பருத்தித்துறை பிரதேச சபையினர் பருத்தித்திறை சுகாதார வைத்திய அதிகாரிபிரிவு பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் உத்தியோகத்தர்களத என பலரும் கலந்துகொண்டனர்.
நெல்லியடி
தற்போது மிக தீவிரமாக பரவிவரும் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்றைய தினம்(07) நெல்லியடி பொலிஸாரால் கரவெட்டி. ஸ்ரீ பரமானந்த சிறுவர் முதியோர் இல்லத்தில் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சிரமதான பணியில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் காஞ்சனா விமலாவீரா தலைமையிலான பொலிஸ் குழுவினரே ஈடுபட்டனர்.
மேலும் யாழ். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டெங்கு நோய் அதிகளவில் பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - எரிமலை
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் (07) மன்னார் பிரதேசத்தின் பல இடங்களில் விசேட சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வீடுகள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழல்களை அடையாளப்படுத்தல், மற்றும் அவற்றை அப்புறப்படுத்துதல், அதே நேரம் நுளம்பு பெருக்கத்துக்கான சூழல் காணப்படும் வீடுகளின் உரிமையாளர்களை அடையாளப்படுத்தும் முகமாக சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,டெங்கு ஒழிப்பு செயலணி உத்தியோகத்தர்கள்,பாதுகாப்பு துறையினர் விசேட கள விஜய செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை மன்னார் பிராந்திய சுகாதார சேவை பணிமனை மற்றும் டெங்கு பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் பொதுமக்களின் உதவியுடன் விசேட சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இம்மாதம் முழுவதும் டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - ஆஸீக்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் டெங்கு நோய் பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் சிரமதான பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதுக்குடியிருப்பில் இன்று(07) முதல் டெங்கு நோய்பரவலை தடுக்க துப்பரவற்ற இடங்களுக்கு சிவப்பு அறிவுறுத்தல் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய் சடுதியாக அதிகரித்திருப்பதனால் நீர் தேங்கி நுளம்பு குடம்பிகள் பரவக்கூடிய சிறிய பாத்திரங்கள் , பிளாஸ்டிக் பொருட்கள், ஏனைய நீர் தேங்கி நிற்ககூடிய பொருட்களை அகற்றுமாறும் சுகாதார திணைக்களம் பொது மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள் மீறப்படும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குதாக்கல் செய்யப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - சத்தீஸ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
