சஜித் காலத்தில் கைவிடப்பட்ட வீடுகள்… மீண்டும் கட்டமைக்க நடவடிக்கை!
சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது.அந்த வீட்டுத்திட்டங்களையும் பூர்த்திசெய்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
உலக வாழ்விடத்தினத்தினை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “சொந்தமாக இருக்க இடம் - ஒரு அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளிலான 5,000 மக்களுக்கான வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று(5) காலை நடைபெற்றது.
ஒரு அழகான வாழ்க்கை
இந்த தேசிய நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாமாங்கத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிரும் பிரதேச அபிவிருத்திக்குழுக்களின் தலைவருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம்,தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கி.சுபாஸ்கரன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் 10இலட்சம் ரூபா நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் “சொந்தமாக இருக்க இடம் - ஒரு அழகான வாழ்க்கை” எனும் திட்டத்தின் கீழ் 450 வீடுகள் அமைக்கப்பட்டு இன்றைய தினம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
பல மில்லியன்
மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், உலக குடியிருப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 5,000 வீடுகளை மக்களிடத்தே கையளிக்கின்ற தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதிலே மட்டக்களப்பு மாவட்டத்திலே 445 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடத்திலே கையளித்துக் கொண்டிருக்கின்றோம், வீட்டுத் திட்டத்தின் ஊடாக. அதனையும் தாண்டி ரீசெட்டில்மென்ட் என்று சொல்லக்கூடிய இடம்பெயர்ந்தோருக்கான வீட்டுத் திட்டத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு பிரதேசத்திலே நாங்கள் இன்னும் மேலதிகமான வீடுகளை நாங்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கின்றோம்.

அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலே 450 வீடுகள் நாங்கள் உருவாக்கி மக்களிடத்திலே நாங்கள் கையளித்துக் கொண்டிருக்கின்றோம். ஆகவே, தொடர்ச்சியாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக வாழ்விடத்தை இல்லாமல் இருக்கின்ற அந்த குடியிருப்பாளர்களுக்கு, பயனாளிகளுக்கு நாங்கள் தொடர்ச்சியாக வீடுகளைக் கையளிக்கின்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆகவே, இந்த வருடம் மாத்திரம் நான் நினைக்கின்றேன் 900 வீடுகளைக் கடந்து நாங்கள் நிறைவு செய்து கொண்டிருக்கின்றோம். 900 பயனாளிகளுக்கு இந்த வீடுகளை நாங்கள் கையளித்துக் கொண்டிருக்கின்றோம். ஆகவே, ஒட்டுமொத்தமாக பல மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடுகளை மாவட்டத்திற்குள்ளே நாங்கள் கையளிக்கப்பட்டிருக்கின்றது.
மக்கள் நம்பிக்கை
ஆகவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உங்களுக்குத் தெரியும், தொடர்ச்சியாக மக்களிடத்திலே மக்கள் பணி செய்கின்ற ஒரு அரசாங்கமாக இருக்கின்றது, மக்கள் நேயமிக்க அரசாங்கமாக இருக்கின்றது. ஆகவே, இந்த அரசாங்கத்தின் ஊடாக இன்னும் மக்கள் பணிகளைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
இனிவரும் காலங்களுக்குள்ளேயே இன்னும் பல வீட்டுத் திட்டங்களை உருவாக்குவதற்கும், சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத் திட்டங்களையும் கூட நாங்கள் இந்த வருடத்துக்குள்ளே மட்டக்களப்பு மாவட்டத்திலே நான்கிற்கு மேற்பட்ட வீட்டுத் திட்டங்களை நாங்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கின்றோம்.

இனிவரும் காலங்களிலும் அந்த கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்களை உருவாக்குவதற்கான நிதிகளை வழங்கி, வருகின்ற வருடத்திலும் பூர்த்தி செய்யத் தயாராக இருக்கின்றோம். ஆகவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீண்டும் மீண்டும் சொல்லக்கூடிய ஒரே விஷயம், நாங்கள் மக்கள் நேயமிக்க அரசாங்கம் என்பதை நாங்கள் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றோம்.
எதிர்க்கட்சியினர் எங்களுக்கு எதிராகப் பல கூச்சலிட்டாலும், எங்களுக்கு எதிரான பல போராட்டங்களை முன்னெடுத்தாலும், அனைத்தும் தோல்வியடைந்த போராட்டங்களாகத்தான் இருக்கின்றது.
இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். இந்த அரசாங்கத்தை உருவாக்கியதும் மக்கள்தான், இந்த அரசாங்கத்தைக் காப்பாற்றுவதும் மக்கள்தான்.
இந்த அரசாங்கத்தை முன்னெடுத்துக் கொண்டு பணிபுரிவதற்கான ஒத்துழைப்பை வழங்குகின்ற, ஆதரவை வழங்குகின்றது இந்த நாட்டு மக்கள்தான் என்பதை நாங்கள் குறிப்பிட விரும்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.