பதவி விலகல் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று வெளியான அறிவிப்பு (Live)
அரசாங்க நிதிக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க குறித்த பதவியில் இருந்து விலகுவதாக சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானதை அடுத்து சபாநாயகர் இதனை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் பதவியில் இருந்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா, அப்பதவியில் இருந்து அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக அதே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தலைமைப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
ஹர்ஷ டி சில்வா கவலை
அதனையடுத்து தனது செயற்பாடுகள் அரசாங்கத்துக்கு தலைவலியாக இருந்தமை காரணமாகவே தான் அப்பதவியில் இருந்து விலக்கப்பட்டதாகவும், அரசாங்கத்தின் செயற்பாடு தனக்கு மிகுந்த மனவேதனை உண்டுபண்ணியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கவலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அரசாங்க நிதிக் குழுவின் தலைமைப் பதவியை விட்டு விலகி, மீண்டும் அந்தப் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில் விட்டுக் கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் வேண்டுகோள் விடுத்திருந்த போதும் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க அதனை மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தான் அந்தப் பதவியில் இருந்து எந்த நேரமும் விலகத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க அறிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




