செல்வா முதல் சேனாதிராஜா வரை
1949ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தமிழர் கட்சியின் முதலாவது தலைவராக எஸ்.ஜே.வி செல்வநாயகத்தில் ஆரம்பித்து அமிர்தலிங்கம், சம்பந்தன், சேனாதிராஜா என நான்கு தலைவர்களை கண்டிருக்கிறது.
இங்கே இந்த நால்வரை விட இடைப்பட்ட காலத்தில் பலர் தலைவர் என்ற பெயரில் ஆவணங்களில் பதியப்பட்டு இருக்கலாம்.
ஆனால், நடைமுறையில் தமிழரசு கட்சியில் நான்கு தலைவர்களே இருந்தார்கள். இறுதியாக மாவை சேனாதிராஜா தலைவராக இருந்து ஓய்வு பெற்று தற்போது மரணத்தை தழுவிக் கொண்டுள்ளார்.
நான்கு தலைவர்கள் மட்டும் என இங்கே குறிப்பிடப்படுவது கட்சியின் செல்நெறியை நடைமுறையாலும், செயலாலும் நிர்ணயித்தவர்கள் என்று கணிக்கப்பட்டே நால்வர் என வரையப்படுகிறது.
இந்த நால்வரும் தமிழ் மக்களுக்கு விட்டுச் சென்ற முதுசம்தான் என்ன? என்பதுவே இன்றைய தேடலாகும்.
தமிழரசு கட்சி
தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை கட்சியின் கோப்புக்களின் பதிவுகளுக்காகவும், கட்சியின் கோப்பு விதிகளுக்காகவும் பலருடைய பெயர்கள் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.
அதனை ஏக மனதாக தெரிவு செய்ததாக அறிக்கைகளும் பதிவேடுகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
ஆயினும், நடைமுறையில் தமிழரசுக் கட்சியின் தலைவர்களாக நால்வர் மட்டுமே பணியாற்றி இருக்கிறார்கள். அல்லது தமிழரசு கட்சியை வழிநடத்தி இருக்கிறார்கள். அல்லது ஆளுமை செலுத்தி இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
தமிழரசு கட்சி 1949ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் 1952ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டு ஆசனங்களை மட்டுமே கட்சி பெற்றது. ஆனால் 1956ஆம் ஆண்டு தேர்தலில் பெரு வெற்றி பெற்று தமிழர்களின் தலைவராக எஸ்.ஜே.வி செல்வநாயகம் மேலெழுந்தார்.
அத்தோடு, ஜிஜி பொன்னம்பலம் 20 ஆண்டுகளாக பெற்றிருந்த தலைமைத்துவம் முடிவுக்கு வந்தது.
ஜி.ஜியின் தலைமைத்துவ காலத்தில் அதாவது 1954, 1955 காலப்பகுதியில் இலங்கை இரண்டு பிரதான தேசியக் கட்சிகளும் சிங்கள மொழிச் சட்டத்தை கொண்டு வருவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து ஒரு முடிவுக்கு வந்து விட்டனர்.
இக்காலப் பகுதியில் சிங்கள மொழிச் சட்டம் சிங்கள மக்கள் மத்தியில் அல்லது சிங்கள தேசத்தில் ஸ்தாபிதம் பெற்றுவிட்டது என்று சொல்வதே பொருந்தும்.
ஆனால், அது 1956ஆம் ஆண்டு செல்வா தமிழர்களுக்கான தலைமைப் பொறுப்பை ஏற்றபோது சட்ட ரீதியாக பிரகடனம் செய்யப்பட்டது என்பதை உண்மையாகும்.
ஆனால், இந்த சிங்கள மொழிச் சட்டத்துக்கு எதிராக தமிழ் தலைவர்கள் காலிமுகத்திடலில் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்து சில மணி நேரத்தில் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டு போராட்டத்தை கைவிட்டு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.
எஸ்.ஜே.வி செல்வா
இதுவே முதலாவது எதிர்ப்புப் போராட்டமாகவும் வரலாற்றில் பதியப்படுகிறது.
சத்தியாக்கிரக போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இந்த மாபெரும் சட்ட மேதை எஸ்.ஜே.வி செல்வாவோ ஏனையவர்களோ இதனை சட்டரீதியாக அணுகி எந்தொரு வழக்கையும் தாக்கல் செய்யவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
இலங்கையின் சோல்பரி யாப்பின் 29வது சரத்தின் A,B,C,D ஆகிய பந்திகள் சிறுபான்மையினர் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது என்ற அடிப்படையில் அந்த 29ஆவது சரத்தை முன்வைத்து இதற்கு எதிராக ஒரு வழக்கை தாக்கல் செய்து இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தடை ஏற்படுத்துவதற்கான சட்ட நுணுக்கங்கள் இருந்தன.
அதேபோல ஒரு சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை பண்டாரநாயக்க அரசாங்கம் பெற்றிருக்கவில்லை என்பதையும் இங்கே குறித்துக் கொள்ள வேண்டும்.
இவர்கள் இந்த 29ஆவது சரத்தை பயன்படுத்தி ஒரு வழக்கை தாக்கல் செய்யாமல் இருந்த காலத்தில் இந்த தனிச் சிங்கள மொழிச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட கோடீஸ்வரன் என்ற எழுதுவினைஞர் ஒரு தனி நபர் வழக்கை தாக்கல் செய்து அதனை லண்டன் பிரிவேனா கவுன்சில் வரை கொண்டு சென்றார் என்பதிலிருந்து இந்த சட்ட மேதைகளின் தலைமைத்துவ செயல்திறன் என்ன என்பதை கேள்விக்கு உட்படுத்தி விட்டது.
1956இல் தலைவர்கள் தமிழர்களின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்ற செல்வநாயகம் எந்த நோக்கத்திற்காக ஆரம்பித்தாரோ அந்த நோக்கமான சமஸ்டி என்ற அடிப்படையில் இருந்து விலகி தமிழர் தாயகத்தை மூன்று பிராந்தியங்களாக பிரித்து அதிகாரத்தை பங்கிடுதல் என்பதற்கு உடன்பட்டு 26-07-1957 பண்டா-செல்வா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந்த ஒப்பந்தம் ஜே.ஆர்.ஜெவர்த்தனாவின் கண்டிநோக்கிய யாத்திரையுடன் கிழித்தெறியப்பட்டது.
அதன் பின்னர், டட்லி சேனநாயக்க ஆட்சிக்கு வந்தவுடன் வடகிழக்கில் தமிழ் மொழி அலுவலக நீதிமன்ற மொழியாக முன்னுரிமைப்படுத்துவதும் வடகிழக்கின் காணிப்பதிவில் தமிழ் மக்களுக்கு முன்னுரிமை வழங்குவதையும் சாராம்சமாகக் கொண்டு டட்லி-செல்வா உடன்படிக்கை 24-03-1965ல் கைச்சாத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தமும் நடைமுறைப்படுத்தாமல் கிழித்தறியப்பட்டு விட்டது.
ஆகவே சிங்களத் தலைவர்களோடு செல்வநாயகம் மேற்கொண்ட எந்த ஒரு அரசியல் நடவடிக்கையும் வெற்றி பெறவில்லை.
அவரால் சிங்கள அரசியல் தலைவர்களிடமிருந்து தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்பது மாத்திரமல்ல தமிழர்களுக்கு சமஷ்டி மட்டுமே தீர்வு என்றும் அந்தத் தீர்வையே கோரிக்கையாக முன்வைத்து இலங்கை தமிழரசு கட்சி பிராந்திய சபைக்கு கீழ் இறங்கியதன் மூலம் கட்சியின் இலக்கை கைவிட்டு விட்டது என்பது தான் உண்மையாகும்.
இந்நிலையில், 1970ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்கா மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பெற்றதனால் புதிய முதலாம் குடியரசு யாப்பை உருவாக்கி சிங்கள மொழிக்கும், பௌத்தத்துக்கும் முன்னுரிமை என்ற கோட்பாட்டை வலுவான அரசியல் யாப்புச் சட்டமாக நிறுவிவிட்டார்.
இதன் பின்னணியில்தான் சமஸ்டியும் இல்லை, பிராந்திய சபையும் இல்லை, மாவட்ட சபையும் இல்லை என்ற நிலையில் முதலாம் குடியரசு 1972 இல் நடைமுறைக்கு வந்ததன் பிற்பாடு ""தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்"" என செல்லநாயகம் குறிப்பிட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனாலும் இதற்கான சரியான ஆதாரம் எதையும் என்னால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. தேடுதல் பட்டியலில் அது இடம் பெறுகிறது.
இதன் பின்னணியில்தான் சமஸ்டியா? தனிநாடா? என்ற கேள்விகள் தமிழ் தலைமைகள் மத்தியில் எழுந்தபோது, இளைய துடிப்புள்ள தலைவராக மிளிர்ந்த அமிர்தலிங்கம் ஆளுமை செலுத்த முனைந்தார்.
தமிழர் ஐக்கிய முன்னணி உருப்பெற்றதன் பின்னர் அது தமிழர் விடுதலைக் கூட்டணியாக பரிணாமம் பெற்று "தனிநாடு" என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அந்தக் கோரிக்கை 1976இல் வட்டுக்கோட்டை தீர்மானத்துடன் பிரகடனமாகவும் வெளிவந்தது.
27-04-1977இல் செல்வநாயகம் மரணம் அடைகின்ற போது அவர் தமிழ் மக்களுக்கு விட்டுச் சென்றது அவர் தலைமைத்துவம் வகித்த காலத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானமும் தனிநாடு என்ற கோரிக்கை மட்டுமே.
அ.அமிர்தலிங்கம்
எஸ்.ஜே.வின் மரணத்தை தொடர்ந்து அ.அமிர்தலிங்கம்(A. Amirthalingam) தமிழரசு கட்சியின் தலைவரானார்.
ஆயினும், தமிழர் விடுதலைக் கூட்டணியை அவரே தலைவராக தலைமை தாங்கினார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அவருடைய தலைமையில்தான் 1977ஆம் ஆண்டு தேர்தல் எதிர்கொள்ளப்பட்டது. அந்தத் தேர்தலை தமிழ் மக்களின் தனிநாட்டு பிரகடனத்துக்கான ஒரு தேர்தலாகவே தமிழ் மக்கள் முன்னே முன்வைக்கப்பட்டது.
1977 தேர்தலில் வெற்றி பெற்றதும் தாம் தனிநாட்டுக்கான ஒரு நிழல் அரசாங்கத்தை உருவாக்குவது என்றே முன்மொழியப்பட்டது.
ஆயினும், தேர்தலில் பெருவெற்றி பெற்ற பின்னர் பண்ணாகத்தில் கூடி நிழல் அரசை அதாவது இடைக்கால கவுன்சிலை உருவாக்கி இருக்க வேண்டும்.
அதனை உருவாக்குவதை விடுத்து இலங்கையின் நாடாளுமன்ற கதிரைக்குள் அமர்ந்து எதிர்க்கட்சி தலைமையாசனத்தை பெற்றுக் கொண்டமைதான் நிகழ்ந்தது.
இதுவே ஆயுதப் போராட்டம் அதிவேகமாக முன்னோக்கி நகர்வதற்கு வழியையும் ஏற்படுத்திக் கொடுத்தது.
இவர்கள் பன்னாகத்தில் கூடிய ஒரு இடைக்கால அரசாங்கத்தை தாவித்து இருந்திருந்தால் சிலவேளை ஆயுதப் போராட்டம் மேலெழுந்து வருவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போயிருக்கும்.
தமிழர் விடுதலைக்காக தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலைமை தாங்கி வழி நடத்தியவர்கள் செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டதன் விளைவு ஆயுதப் போராட்டம் தமிழர்களுக்கு தலைமை தாங்க தொடங்கியது எனலாம்.
ஆயினும், மிதவாத அரசியல் தலைமைகள் என்ற அடிப்படையில் ஒரு பத்து வருடங்கள் அமிர்தலிங்கம் தலைமைத்துவ பொறுப்பிலிருந்த காலத்தில் மாவட்ட அபிவிருத்தி சபை ஒன்றை உருவாக்குவதற்கு ஜே.ஆருடன் உடன்பட்டார்.
அந்த மாவட்ட சபை இரகசிய உடன்பாடும் பற்றிய விபரங்களை ஏ.ஜே.வில்சன் 1989ல் எழுதியநுாலில் வெளிச்சத்துக்கு வந்தபோது அமிர்தலிங்கம் கொல்லப்பட்டார்.
சம்பந்தனின் கையில்
இதன் பின்னர் நடைமுறையில் தமிழரசு கட்சியின் தலைமைத்துவம் சம்பந்தனின்(R. Sampanthan) கையிலேயே இருந்தது .
பேரளவில் ஆவண பதிவுகளுக்காக ஆவரங்கால் சின்னத்துரை பதியப்பட்டு இருக்கலாம். ஆனால் நடைமுறை தலைவர் சம்பந்தமாகவே இருந்தார்.
2004ஆம் ஆண்டு வீட்டு சின்னத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் சம்மந்தன் தலைமைப் பொறுப்பில் அமர்த்தபட்டார்.
சம்பந்தனின் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 22 ஆசனங்களை பெற்றது. இதுவே தமிழர்கள் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பெறக்கூடிய அதிகூடிய ஆசனங்களாகும்.
அதிகூடிய ஆசனங்களை பெற்ற சம்பந்தரினால் முள்ளிவாய்க்கால் பேரவளத்தின் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தை முழுமையாக ஏற்றது மாத்திரமல்ல அவருடைய தலைமையில் அவரால் தமிழ் மக்களுக்கு எதையுமே பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
எதிர்க்கட்சி தலைவருக்குரிய மாளிகையைப் பெற்று பதவி இழந்த பின்னரும் அந்த மாளிகையிலேயே இருந்து மரணித்தும் போனார்.
அவருடைய மரணம் கூட தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பேசு பொருளாக கூட வெளிவரவில்லை என்பது அவர் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுத்தவர் அல்ல என்பதும் அவர் தமிழ் மக்களுடைய தலைவர் அல்ல என்பதையும் வெளிப்படுத்தியது.
மாவை சேனாதிராஜா
சம்பந்தனின் மரணத்தின் பின்னர் தமிழரசு கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா குறியீடாக காட்டப்பட்டார்.
கட்சியின் பதிவேட்டில் அவர் பத்து வருடங்கள் கட்சியின் தலைவராக இருந்தார் என பதிவுகள் சொல்கின்றன.
ஆயினும் அவருடைய தலைமை என்பது சொற்ப நாட்கள் என்று சொல்வதே பொருத்தமானது.
ஆயினும் இங்கே மாவை சேனாதிராஜாவின் அரசியல் செயற்பாடுகள் பற்றி பார்ப்பது மிக அவசியமானது.
1970களில் அவர் ஒரு துடிப்புள்ள இளைஞனாக அரசியல் களத்துக்கு வந்தார். ஒரு தீவிர அரசியல் இளைஞனாக இனம் காணப்பட்டார்.
அந்தக் காலத்தில் யாழ்ப்பாணம் நோக்கி வருகின்ற சிங்களத் தலைவர்களுக்கு கருப்பு கொடி காட்டுவது, கரித்துண்டால் சுவர்களில் எதிர்ப்பு சுலோகங்களை எழுதுவது, சுதந்திர தினத்தை கரிநாளாக கொண்டாடுவதும் என அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் அவர் 41 இளைஞர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனால் அவருடைய பெயருக்கு முன் "சிறை சென்ற செம்மல்" என்ற அடை மொழியும் கிடைத்துவிட்டது.
அவருடைய இருமாப்பான, ஆக்ரோஷமான, வீரகர்ச்சனை இளைஞர்களை எழுச்சி கொள்ள வைத்தது என்பதையும் இங்கு மறுத்துவிட முடியாது.
அன்றைய காலத்தில் அவர் ஆற்றிய உரையை கேட்ட ஒருவரின் நினைவை இங்கே பதிவிட விரும்புகிறேன்.
தாவடி உப்புமடம் சந்திப் பிள்ளையார் கோவில் முன்றலில் 1977ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜா "இளைஞர்களே இத்தாலிய விடுதலை வீரர் கரிபோல்டி உங்களை அழைக்கிறார். இத்தாலிய விடுதலை வீரர் கரிபோல்டியையும் மெஸிடோனியையும் சைபீரியச் சிறை என்ன செய்தது?" என முழங்கினார்.
இந்த முழக்கத்தை கேட்டு அங்கே கைதட்ட ஒரு கூட்டம் இருந்தது. அதனைப் பார்த்துக் கொண்டிருந்த யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை விரிவுரையாளர் அதிர்ந்து போனார்.
தமிழ் மக்களின் அரசறிவியல் அறிவு எங்கே செல்கிறது தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணம் எங்கே செல்லப் போகிறது என்று வேதனைப்பட்டதாக பின்னாளில் எங்கள் அரசியல் வகுப்பில் அந்தக் கூட்டத்தைப் பற்றியும் அதன் அறிவியல் பற்றியும் விளக்கம் அளித்தார்.
கரிபோல்டியையும் மெஸிடோனியையும் எங்கே? சைபீரியச் சிறை எங்கே? இரண்டுக்கும் என்ன தொடர்பு? எந்த பொருளோ தொடர்பு அற்ற வெறும் கர்ச்சனையை ரசித்து கைதட்டிய அப்பாவி மக்களை இப்போதும் நினைத்துப் பார்க்க வேதனையளிக்கிறது.
நாம் ஒரு அரசியல் வரலாற்று அறிவியல் வளர்ச்சிக்கு செல்ல வேண்டும் என்பதை மேற்படி சம்பவம் உணர்த்தி நிற்கிறது.
ஆயினும், மாவை சேனாதிராஜா ஓயவில்லை. முள்ளிவாய்க்காலுக்கு பின்னரும் அவர் அடிக்கடி "போராட்டம் வெடிக்கும்" என்ற அதிரடியான ஆவேச முழக்கங்களை முழங்க தவறவில்லை.
பாவம் அந்த மனிதரால் எதைத்தான் செய்ய முடியும்? அவரின் அளவுகோல் அல்லது அவருடைய ஆளுமை அந்தளவுதான். அவரை நாம் நொந்து கொள்வதில் எந்தப் பயனும் கிடையாது.
அரசியலை முன்னெடுப்பதற்கு ஆளுமை மிக்கவர்கள் முன்வராத போது அவர் என்னதான் செய்வார் இருக்கின்ற ஒன்றைத்தான் அந்த இடத்தில் நிறுத்த முடியும் அவ்வாறுதான் மாவை சேனாதிராஜாவும் வரலாற்றுப் போக்கில் நிறுத்தப்பட்டார்.
அவரிடம் என்ன இருந்ததோ அதைத்தான் தமிழ் மக்களுக்கு அவரால் வழங்க முடியும்.
ஆக அவரால் வீர முழக்கத்தை மாத்திரமே செய்ய முடியும் அதைத்தான் தன்னுடைய இறுதி காலம் வரை அவர் செய்திருக்கிறார்.
தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேலாக தலைமைத்துவ பொறுப்பில் இருந்த மாவை சேனாதிராஜா ஓய்வு பெறுகின்ற போது தமிழர் கட்சியில் தலைமைத்துவப் போட்டி ஏற்பட்டது.
தலைமைத்துவப் போட்டி
அந்தப் போட்டியை எவ்வாறு கையாளலாம் என தமிழரசு கட்சியின் சம்பந்தன் சேனாதிராஜா ஆகிய இரண்டு தலைவர்களும் கையாளத் தெரியாமல் தவித்தனர்.
ஒரு கட்டத்தில் இவர்களால் முன்னுக்கு கொண்டுவரப்பட்ட சுமந்திரன் அந்தத் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்க முண்டி அடித்தார். இதனால் ஏக மனதாக தெரிவு செய்யும் தமிழரசு கட்சியின் தலைமை தெரிவு மரபு சிக்கலுக்கு உள்ளானது.
தமிழரசு கட்சியின் தலைவர்கள் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார்கள் என்ற மரபு இருப்பதாக கூறி பெருமை பேசிக்கொள்ளலாம்.
ஆனால் உண்மையில் உட்கட்சிக்குள் குழுவாதம் செயற்பட்டு இருப்பதையே கடந்த கடந்த கால வரலாறு நிரூபித்திருக்கிறது.
அதனை கடந்த வருடம் கட்சியின் தலைவர் தெரிவு ஏகமனதாக இடம் பெறாமல் உட்கட்சி ஜனநாயகத்தை நிலைநாட்டப் போகிறோம் என்று கூறிய சுமந்திரன் தமிழரசு கட்சியின் தலைவர் தேர்வுக்கு ஒரு உள்ளக தேர்தலை நடத்தினார்.
அந்தத் தேர்தலில் சிவஞானம் ஸ்ரீதரன் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற ஸ்ரீதரனை தலைவர் நாற்காலியில் அமரவிடாமல் உட்கட்சி ஜனநாயகம் பேசிய சட்டப் பயங்கரவாதி சுமந்திரனே இந்தத் தேர்தல் செல்லுபடியற்றது, முறைகேடானது, யாப்பு விதிகளுக்கு முரணானது என பல்வேறு காரணங்களை காட்டி சட்டப் பயங்கரவாத தாக்குதலை தனது ஏவலாளிகள் மூலம் ஒரு வழக்கை தாக்கல் செய்து தலைவர் பொறுப்பை ஏற்க விடாது தற்காலிக தடையை விதித்து இப்போது நிரந்தர தடையாக அது மாறிப் போய் உள்ளது.
இப்போது பதில் தலைவராக சிவி கே சிவஞானம் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
பெருந்தலைவர் என்று பலராலும் சொல்லப்படுகின்ற சொல்ல வைக்கப்படுகின்ற மாவை சேனாதிராஜா மரணத்தின் போது தமிழ் மக்களுக்கு விட்டு சென்றது என்ன?
எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் மரணத்திற்கு கூடிய மக்கள் கூட்டம் அதற்குப் பின்னான அமிர்தலிங்கம், சம்பந்தன் ஆகியோருக்கு கூடவில்லை அது அவர்களுடைய அரசியல் தோல்வியை பறைசாற்றியது.
இப்போது சேனாதிராஜா இறுதியான தலைவராக மரணம் அடைந்திருக்கிறார். அவர் தமிழ் மக்களிடம் நெருக்கடிகளையும், பிரச்சனைகளையும், சிங்களத்தின் ஒத்தோடிகளையும், சிங்களத்தின் உளவாளிகளையுமே விட்டுச் சென்றுள்ளார்.
உண்மையில் இப்போது தமிழரசு கட்சியின் தலைவர் சுமந்திரன் என்பதுதான் நடைமுறை எதார்த்தம்.
"தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும்"
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 02 February, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.