ஒரு நல்ல நண்பரை இழந்துள்ளேன்! மாவைக்கு விக்னேஸ்வரனின் இரங்கல் செய்தி
மாவை சேனாதிராஜா(Mavai Senathirajah) வெறும் தமிழ் இனவாதி அல்லாமல் தமிழ்த் தேசியத்தின் தூணாகவே எனக்குப் புலப்பட்டார் என நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாவை சேனாதிராஜாவின் மறைவையொட்டி க.வி.விக்னேஸ்வரன்(Vigneswaran) வெளியிட்ட இரங்கல் அறிக்கையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில்,
“அரசியலுக்கு வந்த பின்னர் அவருடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. எப்பொழுதும் ஒரு சகோதர வாஞ்சையுடனேயே அவர் என்னுடன் பழகியுள்ளார். எந்தக் காரணத்தினாலும் எமக்குள் மனக் கசப்பு ஏற்பட்டதில்லை.
அவருக்குப் பதிலாக என்னைத் சம்பந்தன் வடமாகாண முதலமைச்சராக கட்சிக்கு அறிமுகப்படுத்தியதால் மாவை சற்று மனவருத்தப்பட்டார். அவரின் நிலை பற்றி அறிந்த பின் எனக்கும் மனவருத்தந்தான்.
தனது 16 அல்லது 17ஆவது வயதில் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தவர் மாவை. கட்சிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் விஸ்வாசமாக நடந்து கொண்டவர். பல போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டவர்.
நல்ல பேச்சாளர். அவர் முதலமைச்சராக வர ஆசைப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், சூழல் என்னை முதலமைச்சர் ஆக்கியது.
இதன் காரணத்தால் எனக்கும் மாவைக்கும் இடையில் போட்டி பொறாமை என்று பத்திரிகைகள் கூறத் தலைப்பட்டிருந்தாலும் விதங்களிலும் மாவை என்னுடன் மிகவும் அன்புடனும் பண்புடனுந்தான் நடந்து கொண்டார்.
என்னைப் பொறுத்த வரையில், நான் அறிந்த வகையில் மாவை சமரசத்தையும் சமாதானத்தையுமே விரும்பினார்.
எமது கட்சியின் தேசியப் பெருவிழாவிற்கு சென்ற ஆண்டு அழைத்த போது அவர் பார்வையாளர்களில் ஒருவராக வந்து முன் வரிசையில் இருந்து நிகழ்ச்சிகளை கடைசி வரையில் இருந்து கேட்டு இரசித்துச் சென்றார். எல்லா விதங்களிலும் எனக்கு உறுதுணையாகவே அவர் இருந்தார்.
அவரின் பிரிவு மனதில் ஒரு ஏக்கத்தை உண்டு பண்ணியுள்ளது. பழம் பெரும் தமிழ் அரசியல்வாதி ஒருவரை இழந்து நிற்கின்றோம். ஒரு நல்ல நண்பரை நான் இழந்துள்ளேன்! மாவையின் ஆத்மா இறைவனடி சேர்வதாக!” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |