வான் மோதி மதகுரு ஒருவர் பலி
கற்பிட்டி - புத்தளம் பிரதான வீதியில், கண்டக்குடா பள்ளிவாசலுக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் மௌலவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று(15.10.2026) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
வவுனியாவைச் சேர்ந்தவரும், இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான 34 வயதுடைய மௌலவி மின்ஹாஜ் என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

இவர் கண்டக்குடாவில் திருமணம் முடித்து, அங்கு வசித்து வந்தவராவார்.
சம்பவத்தன்று கண்டக்குடா பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காகப் பிரதான வீதியைக் கடக்க முற்பட்டவேளை, புத்தளம் பகுதியிலிருந்து வேகமாக வந்த வான் ஒன்று மௌலவி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் வீதியில் தூக்கி வீசப்பட்ட மௌலவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய வான் ஆனமடுவப் பகுதியைச் சேர்ந்தது என்றும், அது கண்ட்குழிப் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண வீட்டுக்கு வருகை தந்திருந்த வேளையிலேயே விபத்து நேர்ந்துள்ளது என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.