பாரிய மோசடியில் ஈடுபட்ட கல்விப் பணிப்பாளருக்கு எதிராக விசாரணை
சாதாரண தர மாணவர்களுக்கான கணிதப் பாட கருத்தரங்கு நடத்தியதாக போலி ஆவணங்கள் மூலம் ஆறுலட்சம் ரூபா மோசடி செய்த கல்விப் பணிப்பாளருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
ஆறுலட்சம் மோசடி
கடந்த 2022ம் ஆண்டு அநுராதபுரம் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கணித பாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் கணித பாடக் கருத்தரங்கு ஒன்றை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன் போது கருத்தரங்கை நடத்தாமல் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து 600,000 ரூபாவிற்கும் அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்திய அநுராதபுர பிராந்திய பெண் கல்வி பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக வடமத்திய மாகாண பிரதம செயலாளர் வருண சமரதிவாகர ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்துள்ளார்.
அநுராதபுரம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் சாதாரணதரத்தை கற்கும் மாணவர்களுக்கான கணிதபாடத்தின் பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கில் 28 பாடசாலைகளில் 30 நிலையங்களில் 17.10.2022 முதல் 26.10.2022 வரையிலான காலப்பகுதியில் கணித கருத்தரங்குகளை நடாத்துவதற்கு மாகாணக் கல்வி அமைச்சு திட்டமிட்டிருந்தது.
போலி ஆவணங்கள்
எனினும் திட்டமிட்டபடி குறித்த காலப்பகுதியில் 14 பாடசாலைகளில் மாத்திரம் இந்த கணித கருத்தரங்குகள் நடத்தப்பட்டநிலையில் மேலதிகமாக 14 பாடசாலைகளில் கணித கருத்தரங்குகள் நடத்தப்பட்டதாக போலி ஆவணங்களை உருவாக்கி குறித்த தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த கணித கருத்தரங்கை நடத்துவதற்குத் தேவையான வினாத்தாள்களை அச்சடித்ததாக போலி பற்றுச்சீட்டுக்களை சமர்ப்பித்து ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் முறைகேடு செய்துள்ளார்.
இதுதவிர, இந்த கணித கருத்தரங்குகளை நடத்துவதற்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டதாக பொய்யான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த கல்விப் பணிப்பாளருக்கு எதிரான தலைமைச் செயலாளரின் குற்றச்சாட்டில் மேலும் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |