மலையகத்தில் மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் வெடிக்கும்: ராஜாராம்
" தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடிகள் தொடரும் பட்சத்தில் மலையகத்தில் மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் வெடிக்கும். நாம் கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிரானவர்கள் அல்லர். கூத்து ஒப்பந்தத்தையே எதிர்க்கின்றோம். எனவே, தொழிலாளர்களுக்கு நன்மை பயக்ககூடிய வகையில் கூட்டு ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட வேண்டும்." என மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான ராஜாராம் வலியுறுத்தினார்.
நுவரெலியாவில் இன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும்தெரிவிக்கையில்,
" மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் தற்போது மூன்று தடவைகள் கொழுந்து நிறை அளவிடப்படுகின்றது. இதன்போது ஒரு தடவைக்கு 5 கிலோ கழிக்கப்படுகின்றது. அதாவது தொழிலாளர்கள் 10 கிலோ பறித்திருந்தால் 5 கிலோதான் அவர்களின் கணக்கில் இடப்படும். ஒரு தடவைக்கு 5 கிலோ என்ற அடிப்படையில் நாளொன்றில் 15 கிலோ கொழுந்து கழிக்கப்படுகின்றது.
தோட்ட நிர்வாகம் இலாபம் உழைப்பதற்காகவே தொழிலாளர்களின் இரத்தம் இவ்வாறு உறிஞ்சப்படுகின்றது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்நிலைமையை இனியும் கைகட்டி வேடிக்கை பார்க்கமுடியாது. தொழிலாளர்களை வஞ்சிக்கும், சுரண்டும் நடவடிக்கைகளை நிர்வாகங்கள் கைவிட வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் அந்நிலைமை தொடர்ந்தால் மலையக தழுவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அது மக்கள் எழுச்சி போராட்டமாகவும் மாறும். கூட்டு ஒப்பந்தமானது கூத்து ஒப்பந்தமாகக்கூடாது என்பதே எமது கருத்து. கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள தான்தோன்றித்தனம் இல்லாமல் ஆக்கப்பட்டு, அது தொழிலாளர்களுக்கு ஏற்புடையதாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
தொழிலாளர்களின் நலன்புரி விடயங்களை கருதிக்கொண்டு அது மக்கள் சார்பானதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இதுவரை அமுலிலிருந்த கூட்டு ஒப்பந்தம் நியாயமானதாக இருந்ததா? வெளிப்படைத்தன்மை இருக்கவில்லை, அதனால்தான் எதிர்த்தோம்.
அதேவேளை, சுசில் பிரேமஜயந்த தொடர்பில் தகவல் திரட்டிய புலனாய்வு
பிரிவினருக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏன் உரிய வகையில்
செயற்படமுடியாமல் உள்ளது, பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்? உயிர்த்த ஞாயிறு
தாக்குதல் சம்பவத்தின்போது கோமா நிலையிலிருந்தனரா?" என தெரிவித்துள்ளார்.