பாரிய பணவீக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது! - இலங்கை அரசுக்கு எச்சரிக்கை
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட 229 பில்லியன் ரூபா பாரிய நிவாரணப் பொதியை வழங்குவதற்கு பணம் அச்சிடப்பட்டால் எதிர்காலத்தில் பாரிய பணவீக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் டியூ குணசேகர இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
இந்த நிவாரணப் பொதியானது பொருளாதார ரீதியிலான முடிவை விட அரசியல் முடிவாகவே தோன்றுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிவாரணப் பொதிகள் இலங்கை உற்பத்திப் பொருட்களை இடமாற்றம் செய்ய பயன்படுத்தியிருந்தால், இவ்வளவு பணவீக்கம் ஏற்பட்டிருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் இவ்வளவு வலுவான டொலர் நெருக்கடி ஏற்படுவது இதுவே முதல் முறை என்று மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அந்நிய செலாவணி கையிருப்பு தட்டுப்பாடு, கடுமையான பணவீக்க அதிகரிப்பு காரணமாக 2022 ஆம் ஆண்டில் இலங்கை வங்குரோத்து அடையும் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாக பிரித்தானியாவில் வெளியாகும் தி. கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், வாழ்க்கை செலவு அதிகரிப்பு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை மக்கள் அன்றாக உணவுவை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமைக்கு உள்ளாகி இருப்பதாகவும் உணவுப் பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் பீ.பீ.சி செய்தி வெளியிட்டிருந்தது.