ஈரானில் அரசியல் கைதிகளுக்கான மரணதண்டனை நிறைவேற்றத்தில் உயர்வு
மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் மற்றும் பதற்றமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, ஈரானிய அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதை கணிசமாக அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நோர்வேயின் ஒஸ்லோவைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'ஈரான் மனித உரிமைகள்' என்ற தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த அமைப்பின் தரவுகளின்படி, ஈரான் அரசு இந்த ஆண்டில் மட்டும் இதுவரை குறைந்தது 47 அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 16 ஆக மட்டுமே இருந்த நிலையில், தற்போது இது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் இறுதியில் ஈரான் முழுவதும் வெடித்த பரவலான போராட்டங்களின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போராட்டக்காரர்கள் மீது வன்முறையான அடக்குமுறைகளைக் கையாள வேண்டாம் என ஈரானியத் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அத்துடன், போராட்டக்காரர்களின் மீட்புக்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.
எனினும், அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் போக்கு நீடித்ததாலும், அதன் விளைவாக உலகளாவிய பொருளாதார பாதிப்புகள் மோசமடைந்ததாலும், வெள்ளை மாளிகையின் கடுமையான தொனி காலப்போக்கில் மென்மையடைந்தது.
இதன் காரணமாக, ஈரான் அதிருப்தியாளர்களுக்கான அமெரிக்காவின் ஆதரவு குறையத் தொடங்கியது. இத்தகைய உலகளாவிய புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியிலேயே, ஈரானில் மரணதண்டனைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.