வெளிநாட்டு வேலைவாய்ப்பினை நாடிச் செல்லும் இலங்கை பெண்களுக்கான முக்கிய அறிவித்தல்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல்,சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்று பல இன்னல்களை எதிர்கொண்டுள்ள இலங்கை பெண்களை மனிதாபிமான அடிப்படையில் நாட்டுக்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மனித கடத்தல் தரப்பினருக்கு அகப்படாமல் சட்ட வழிமுறைகளுக்கு அமைய வெளிநாடுகளுக்கு செல்லுமாறு பொதுமக்களிடம் வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2020 ஆம் ஆண்டு 15640 பெண்களும், 2021 ஆம் ஆண்டு 29314 பெண்களும், 2023 ஆம் ஆண்டு நிறைவடைந்த மூன்று காலப்பகுதியில் 39,915 பெண்களும் வீட்டு பணிப்பெண்களாக மத்திய கிழக்கு உட்பட பெரும்பாலான நாடுகளுக்கு சென்றுள்ளார்கள்.
மனித கடத்தல் வியாபாரிகளிடம் சிக்கிக் கொள்ளும் குழுவினர்
இரண்டு வருடகால ஒப்பந்த அடிப்படையில் இலங்கை பணிப்பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக செல்கிறார்கள்.
இலங்கை வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து முறையான வழிமுறைகளுடன் வெளிநாடு செல்லும் பணிப்பெண்கள் தொடர்பில் பணியகம் முழு பொறுப்பேற்கும். சட்டத்துக்கு அமைய வெளிநாடு செல்லுமாறு பல அறிவுறுத்தல்களை விடுத்தாலும் ஒரு தரப்பினர் மனித கடத்தல் வியாபாரிகளிடம் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.
மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவர் மனித கடத்தல் குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல், சட்டத்துக்கு முரணான வகையில் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள இலங்கை பெண்களை மனிதாபிமான அடிப்படையில் நாட்டுக்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய மட்டத்தில் தாதியர் சேவையில் 36 ஆயிரம் மில்லியன் தாதியர்களுக்கான கேள்வி காணப்படுகிறது. முறையான பயிற்சிகளுடன் இலங்கை தாதியர்களுக்கு உலகளாவிய மட்டத்தில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள இலங்கை மருத்துவம் மற்றும் தாதியர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து பணிப்பெண்களாக செல்பவர்கள் நாடு திரும்பியவுடன் அவர்களின் நலன் பேணுவதற்கு பிரதேச சபை ஊடாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய வகையில் பொது வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
நாட்டுக்கு அதிக அந்நிய செலாவணியை அதிகம் ஈட்டிக் கொடுக்கும் பணிப்பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி சேவைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத்துக்கு உண்டு.
போலியான ஆசை வார்த்தைகளை குறிப்பிடும் மனித கடத்தல் தரப்பினருக்கு அகப்படாமல் சட்ட வழிமுறைகளுக்கு அமைய வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு செல்லுமாறு பொது மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
சட்டவிரோதமான முறையில் செயற்படும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.