சிறைக்குள் நன்றாக ஓய்வெடுத்தேன்! திலினி பிரியமாலி வெளியிட்ட தகவல்
கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண் தொழிலதிபர் திலினி பிரியமாலி நேற்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நான் சிறைக்குள் நன்றாக ஓய்வெடுத்தேன். நடந்த சம்பவங்களால் எனது எதிர்காலம் பாதிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை” என்று திலினி பிரியாமாலி சிறையிலிருந்து விடுதலையான பின்னர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார்.
மோசடி வழக்கு
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"நான் நலம். சிறைக்குள் மிகவும் நிம்மதியாக இருந்தேன். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது எப்படி என்று தெரியவில்லை. இருப்பினும் வெளியில் கூறப்பட்ட வகையில் அந்தளவுக்கு தீவிரமானது அல்ல.
சிறைச்சாலையில் விசாரணையின் போது என்னை நடத்திய விதம் தொடர்பில் ஊடகங்களில் வெளியிடப்பட்டதைப் போல எதுவும் இடம்பெறவில்லை. பேசி தீர்த்துக்கொள்ளக்கூடிய பிரச்சினைகள் அவை. நான் ஏன் இவ்வளவு பிரபலமானேன் என்று எனக்குத் தெரியவில்லை. என்னை பற்றி இரண்டரை மாதங்களாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.
நான் செய்தவை, செய்யாதவை எல்லாம் ஊடகங்கள் மூலம் செய்திகளாக வெளியாகின. எனக்கு ஒரு பெரிய அநியாயம் நடந்துள்ளது. என்னுடன் பழகியவர்கள் என் மீது கோபமாக இருந்தால், அவர்கள் என்னை பற்றி நல்லதாக சொல்ல மாட்டார்கள். இவற்றினால் எனது எதிர்காலம் பாதிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்.
எனக்கு நிறைய அனுபவம் கிடைத்துள்ளது. ஒரு அறிவாளி சிறைக்குச் சென்றால், அது ஒரு பல்கலைக்கழகமாக மாறும். நீதிமன்ற தீர்ப்புப்படி எல்லாம் நன்றாக நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.



