பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த திலினி பிரியமாலி! மற்றுமொரு மோசடி அம்பலம்
கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்ததாகக் கூறப்படும் திலினி பிரியமாலி மற்றுமொரு வழக்கு தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடவத்தை பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் இருந்து 503,200 ரூபா பெறுமதியான தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்து அதற்கான நிராகரிக்கப்பட்ட காசோலையை வழங்கியமை தொடர்பிலேயே இவ்வாறு மேலும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடவத்தை பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், குறித்த வழக்கு இன்று கடவத்தை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்குமூலம் பதிவு
இதன்போது ஏற்கனவே மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, அந்த வழக்கிற்காக இன்று கடவத்தை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
பாரிய நிதி மோசடி வழக்கு தொடர்பில் திலினி பிரியமாலி மற்றும் அவரது சகா இசுரு பண்டார ஆகியோர் தற்போது நவம்பர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, திலினி பிரியமாலியுடன் தொடர்பில் இருந்த நடிகை மற்றும் அறிவிப்பாளர் உட்பட 06 பேர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
