இலங்கையில் தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி
இந்தியாவின் சீரம் நிறுவனம் உரிய நேரத்தில் எஸ்ட்ரா செனேகா தடுப்பூசிகளை அனுப்பாமைக் காரணமாக இலங்கையில் தடுப்பூசி செலுத்துவதில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன இதனை தெரிவித்திருக்கிறார்.
சீரம் நிறுவனம் இலங்கைக்கு உறுதியளித்தப்படி இரண்டாவது தொகுதி எஸ்ட்ரா செனேகா தடுப்பூசிகளை அனுப்ப முடியாமைக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்றின் தீவிரப் பரவலே காரணமாகும்.
இது தொடர்பில் இலங்கையும் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. எனினும் ஏற்கனவே இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி இந்த வருடத்தில் 10 மில்லியன் கோவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்க வேண்டும்.
அதில் ஏற்கனவே 5 லட்சம் குப்பிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளன. இதனைத் தவிர இந்தியா ஏற்கனவே 5 லட்சம் குப்பிகளை இலங்கைக்கு இலவசமாக வழங்கியிருந்தது. முதல் தடவையாக 5 லட்சம் குப்பிகள் 2021 பெப்ரவரி 21 ஆம் திகதி இலங்கைக்கு வழங்கப்பட்டன.
இதனை அடுத்து மார்ச் 21 ஆம் திகதியும் 2021 ஏப்ரல் 21 ஆம் திகதியும் இந்தியாவில் இருந்து கோவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படவிருந்தன. மூன்றாவது கால ஆண்டில் 3.5 மில்லியன் கோவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு இந்தியாவால் வழங்கப்படவிருந்தன.
அதே நேரம் கடைசி கால ஆண்டில் 5 மில்லியன் கோவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவிருந்தன. இந்த தடுப்பூசிகள் கிடைக்காமைக் காரணமாகவே இலங்கையில் தற்போது தடுப்பூசி செலுத்துவதில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஏற்கனவே சீனா மற்றுமொரு தொகுதி கோவிட் தடுப்பூசியை வழங்குவதாக உறுதியளித்த
போதும் இன்னும் அதற்கான திகதி கிடைக்கவில்லை.
அதே நேரம் ரஷ்யாவின் ஸ்புட்னிக்வீ தடுப்பூசிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை
கிடைக்கவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.