ஹட்டனில் பள்ளிவாசல் காவலாளி படுகொலை : சந்தேகநபர் தப்பியோட்டம்
ஹட்டன் பகுதியிலுள்ள பள்ளிவாசலின் காவலாளி மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பள்ளிவாசலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரு வருடங்களாக காவலாளியாக பணியாற்றிவரும் ஹட்டன், ஹிஜிரபுர பகுதியைச் சேர்ந்த சி.எம். இப்ராஹிம் (வயது - 67) என்பவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தலைப்பகுதியில் தாக்குதல்
பள்ளிவாசலின் உண்டியல் பல தடவைகள் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றாமல் இருப்பதற்காகவே காவலாளி நியமிக்கப்பட்டிருந்ததாக பள்ளிவாசல் நிர்வாக சபை தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் பள்ளிக்குள் வருவது மற்றும் உண்டியலை உடைப்பது போன்ற காட்சிகள் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பகுதியிலேயே நடத்தப்பட்டுள்ள தாக்குதலிலே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கொலை செய்த சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |