கிளிநொச்சியில் நபரொருவர் படுகொலை: சடலத்தில் வெட்டுக்காயங்கள்
கிளிநொச்சி மாவட்டத்தின், முழங்காவில் பொலிஸ் பிரிவில் நபரொருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலைச் சம்பவம் இன்று காலை 10 மணியளவில் பல்லவராயன் கட்ட சோலை மாதிரி கிராமத்தில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவத்தின்போது செல்வரத்தினம் பிரதீபன் (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலத்தின் கழுத்துப் பகுதியில் முறிவுகள் காணப்படுகின்றதாகவும், கால் பகுதியில் வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் முழங்காவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
