இலங்கை கடற்படையில் அண்மையில் சேர்க்கப்பட்ட கடல் ரோந்துக் கப்பலின் பணி ஆரம்பம்
அமெரிக்க கடலோரக் படையிலிருந்து பெறப்பட்ட கடல் ரோந்துக் கப்பலான P 627 இலங்கை கடற்படையில் அண்மையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று(22.11.2022) கொழும்பு துறைமுகத்தில் விஜயபாகு என பெயரிடப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளது.
விஜயபாகு..!
P 627 கப்பல் 2022 செப்டெம்பர் 03 ஆம் திகதி சியாட்டில் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பயணத்தை ஆரம்பித்து, கடல் வழியாக சுமார் 10656 கடல் மைல்கள் (19734 கிமீ) கடந்து நவம்பர் 02 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது.
இந்த நிலையில் நேற்றைய நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு இலங்கை கடற்படையினரால் கௌரவிப்பு மரியாதை வழங்கப்பட்டுள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுடன், விஜயபாகு கப்பலில் ஏறிய ஜனாதிபதி, கப்பலின் பெயர்ப் பலகையைத் திரைநீக்கம் செய்துள்ளார்.
அமெரிக்க தகவல்கள்
இலங்கை கடற்படையால் பெறப்பட்ட இரண்டாவது 'ஹமில்டன் கிளாஸ் உயர் தாங்குதிறன் கொண்ட இந்த கப்பல் ' P 627, 115m நீளம் கொண்டது.
187 பணியாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ற நவீன ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டுள்ளது.
அமெரிக்க கடலோர காவல்படையுடன் தனது பணியின் போது, இந்தக் கப்பல் சட்டவிரோத
மீன்பிடித்தல், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் அமெரிக்க கடற்பகுதியில் அதிக
எண்ணிக்கையிலான போதைப்பொருட்களைக் கைப்பற்றுவதன் மூலம் சேவையை வழங்கியுள்ளதாக
அமெரிக்க தகவல்கள் தெரிவித்துள்ளன.